இதுக்கு மேல கேக்காதீங்க?! அவ்வளவு தான்! கூடுதல் தொகுதி கேட்கும் கூட்டணி கட்சிகள்! திமுக கறார்!
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இந்த முறை, கூடுதலாக நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகளையும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர தி.மு.க. பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2021 தேர்தலில் வலுவான கூட்டணியுடன் வெற்றி பெற்ற திமுக, இம்முறை கூடுதல் கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த முறை திமுக 173 தொகுதிகள், காங்கிரஸ் 25, விடுதலை சிறுத்தைகள் 6, மார்க்சிஸ்ட் 6, இந்திய கம்யூனிஸ்ட் 6, மதிமுக 6, முஸ்லிம் லீக் 3, கொங்கு மக்கள் தேசிய கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, மற்றும் சில சிறிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
இம்முறை தேமுதிக (தே.மு.தி.க.) கூட்டணியில் இணைய உறுதியாகியுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு தேமுதிகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீடும் வழங்க திமுக உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணியில் இணைந்தது.
இதையும் படிங்க: 21 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கும் திமுக! வாக்கு சிதறலை தடுக்க மெகா வியூகம்!! ஸ்டாலின் ஃபார்முலா!
அப்போது தொகுதி கிடைக்கவில்லை, ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்கப்பட்டது. கமல்ஹாசன் தற்போது எம்பியாக உள்ளார். இம்முறை இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு வருகிறார். கட்சி நிர்வாகிகளை போட்டியிட வைத்து கட்சியை உயிர்ப்புடன் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் திமுக 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து 2 தொகுதிகள் வழங்கலாமா என திமுக யோசித்து வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் இம்முறை இரட்டை இலக்க தொகுதிகள் கேட்கின்றன. காங்கிரஸ் ஒரு படி மேலே போய் ஆட்சியில் பங்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
விஜய்யின் அரசியல் வருகையால் திமுக காய்களை கண்ணும் கருத்துமாக நகர்த்தி வருகிறது. ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கிய அதே தொகுதிகளையே மீண்டும் வழங்க திட்டமிட்டுள்ளது. புதிய கட்சிகளுக்கு தொகுதி தேவைப்பட்டால் பழைய கட்சிகளிடமிருந்து மாற்றி கொடுக்கலாம் என திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
விரைவில் கூட்டணி கதவை அடைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த பணிகள் சுறுசுறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் குழு ஏற்கனவே ஸ்டாலினை சந்தித்துள்ளது. அதன் பிறகு மற்ற கட்சிகளுடன் பேச்சு நடைபெறும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் அனைத்து பணிகளையும் முடித்து பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட திமுக திட்டமிட்டுள்ளது. சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை அழைத்து பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டம் உள்ளது. எந்தெந்த ஊர்களில் கூட்டம் நடத்தலாம் என பட்டியல் தயாராகி வருகிறது. திமுக கூட்டணி இம்முறை மிக வலுவாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அய்யா தரப்புக்கு 3 தொகுதி!! திமுக - பாமக டீல் ஓவர்! அமைச்சர் எ.வ.வேலு தலையீட்டால் திருமாவளவன் டென்சன்!