பீகாரில் பாஜக வெற்றி பெற திமுகவே காரணம்!! திரைமறைவில் நடந்த வேலைகள்!! புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்!
'பீகாரில் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு, தி.மு.க.,வும் ஒரு காரணம்' என, சமூக வலைதளங்களில், பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., கூட்டணி 202 தொகுதிகளை வென்று அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு தி.மு.க.,வின் விமர்சனங்களும் ஒரு காரணம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கூறுகின்றனர். ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒன்றாக இருக்கும் படத்துடன் இந்த விமர்சனங்கள் பரவி வருகின்றன.
பீகார் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின.
ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் 'ஓட்டு திருட்டு' நடந்ததாகக் கூறியதைப் போல, பீகாரிலும் ஓட்டு திருட்டு நடக்கிறது என்று கூறி ஆகஸ்ட் 17 முதல் 15 நாட்கள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' நடத்தினார். ஆகஸ்ட் 27 அன்று பாட்னாவில் நடந்த யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கா... அப்படினா? காவல்துறையில் நிர்வாக குளறுபடி... தவெக விளாசல்...!
இந்தப் படத்தை வைத்து பா.ஜ., பிரசாரம் செய்தது. தமிழகத்தில் பணியாற்றும் பீகார் மக்களை இழிவுபடுத்தும் தி.மு.க., தலைவரை அழைத்து வந்து ராகுலும் தேஜஸ்வியும் பீகாரிகளை அவமானப்படுத்திவிட்டதாகக் கூறியது.
பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி, “கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களை அவதூறு செய்கின்றனர். தமிழகத்தில் பீகார் தொழிலாளர்களை தி.மு.க., துன்புறுத்துகிறது” என்றார். இதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். “தமிழகம்-பீகார் இடையே பகை ஏற்படுத்த மோடி முயல்கிறார்” என்றார்.
தேர்தல் பிரசாரத்தில் தேஜஸ்வி யாதவ் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். “நாட்டிலேயே சிறந்த முதல்வர் யார்?” என்ற கேள்விக்கு “தமிழக முதல்வர் ஸ்டாலின்” என்றார். இதைச் சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் பீகார் மக்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,வை தேஜஸ்வி புகழ்கிறார்” என்று விமர்சித்தார்.
தி.மு.க., அமைச்சர்கள் நேரு, தயாநிதி மாறன், பொன்முடி, ஆ.ராசா, ஆ.ரா.எஸ்.பாரதி ஆகியோரின் பேச்சுகளை ஹிந்தி மொழிபெயர்ப்புடன் பா.ஜ.,வினர் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் சிலர், “பீகார் மற்றும் வட மாநில மக்கள் குறித்த தி.மு.க., விமர்சனங்களே பா.ஜ., வெற்றிக்கு காரணம்” என்று கூறுகின்றனர்.
“பீகார் வெற்றிக்கு தி.மு.க.,வும் கை கொடுத்தது” என்று ராகுல்-ஸ்டாலின்-தேஜஸ்வி படத்துடன் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவுகின்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் இதை ஆமோதிக்கின்றனர். இந்த விமர்சனங்கள் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: கரூர் அதிமுகவுக்கு கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி... திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணனுக்கு ஸ்கெட்ச்...!