பொறுப்பேற்ற 12 நாளிலேயே இப்படியா? திமுக கண்டனம்! தவெக விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆளும் தவெக அரசு மீது எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டியுள்ளது.
கோவை: கோவையில் 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், எதிர்க்கட்சியான திமுக சார்பில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிருகத்தனமான செயலைச் செய்த குற்றவாளிகளுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்து கோவை மக்கள் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, திமுக அவர்களுக்கு துணையாக நிற்கும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!
புதிய அரசு பொறுப்பேற்று வெறும் 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரௌடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். “இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது” என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
“இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டம் ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என முதல்வர் விஜய்யை நோக்கி தமிழ்நாட்டு மக்கள் சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவை சிறுமி படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் மீட்கப்பட்டதில் இருந்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள இந்த நிலையில், ஆளும் அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அழுதுகொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகள் விரைவில் பிடிபட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!