×
 

ஆட்சி தான் டார்கெட்! அடுத்தடுத்து மாநாடு போடும் திமுக!! செலவை சமாளிக்க முடியாமல் திணறும் மா.செயலாளர்கள்!

தி.மு.க.,வில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் இளைஞரணி மாநாடு, துணை பொதுச்செயலர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடு அடுத்தடுத்து நடக்க உள்ளன.

தி.மு.க. கட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பிப்ரவரி மாதம் முழுவதும் தொடர் மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞரணி, மகளிர் அணி, ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடு என பிரித்துப் பிரித்து நடத்தப்படும் இந்த மாநாடுகளால் கட்சி நிர்வாகிகள் செலவு அதிகரிப்பதால் கவலையில் உள்ளனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மாநாடுகள் தொடங்கியுள்ளன. வட மண்டல இளைஞரணி மாநாடு திருவண்ணாமலையில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது. தென் மண்டல இளைஞரணி மாநாடு பிப்ரவரி முதல் வாரத்தில் விழுப்புரத்தில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மேற்கு மண்டல இளைஞரணி மாநாடும் நடைபெற உள்ளது.

இதேபோல் மகளிர் அணி மாநாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன. துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி தஞ்சாவூரில் மத்திய மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஏற்கனவே மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: திமுக இளைஞரணியில் இருந்து களமிறங்கும் வேட்பாளர்கள்! உதயநிதி ஸ்டாலின் வீட்டில் நடந்த தடபுடல் விருந்து!

தென் மண்டல மற்றும் வட மண்டல மகளிர் அணி மாநாடுகளும் விரைவில் நடக்க உள்ளன. தென் மண்டலத்துக்கு கனிமொழி பொறுப்பாளராக இருப்பதால், அங்கு மாநாட்டை சிறப்பாக நடத்த கனிமொழி ஆதரவாளர்கள் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடு பிப்ரவரி 8-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர். அதைத் தொடர்ந்து மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டல ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடுகளும் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளன.

அடுத்த மாதம் முழுவதும் இப்படி தொடர் மாநாடுகள் நடப்பதால், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இது குறித்து தி.மு.க. மாவட்டச் செயலர்கள் சிலர் கூறியதாவது: “தி.மு.க. வரலாற்றில் இப்படி தொடர் மாநாடுகள் நடத்தப்பட்டதில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு மாநாடு மட்டுமே பெரிய அளவில் நடக்கும். 

ஆனால் தற்போது இளைஞரணி, மகளிர் அணி, ஓட்டுச்சாவடி முகவர்கள் என பிரித்துப் பிரித்து மாநாடு நடத்துவதால் செலவு மிக அதிகமாக உள்ளது. கட்சி நிர்வாகிகள் இதைப் பார்த்து கலங்கி உள்ளனர். ஒன்று மாநாடுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாநாட்டு செலவுக்கு கட்சித் தலைமை பணம் ஒதுக்க வேண்டும்” என்று கவலை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திமுகவில் புது குழப்பம்! தியாகராஜன் இருந்தவரை சூப்பர்! உதயநிதி மோசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share