×
 

நோட்டீஸை காட்டினா கவனிப்பு பலமா இருக்கும்! உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் திமுக புது டெக்னிக்!!

துண்டறிக்கையை தூக்கி எறியாதீங்க... ‘கவனிப்பு’ வரும்போது காட்டுங்க! – தி.மு.க.வின் புதிய உத்தி!

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உட்பட தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் பல தொகுதிகளில், கட்சியினர் ஒரு வித்தியாசமான பிரசார உத்தியைக் கையாண்டு வருகின்றனர். 

ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டறிக்கையை வழங்கும் போது, “இதை தெருவில் தூக்கி போடாதீங்க... ‘கவனிப்பு’ செய்ய வரும்போது காட்டுங்கள்” என்று கூறி வினியோகித்து வருகின்றனர்.

தி.மு.க. நிர்வாகிகள் இது குறித்து கூறுகையில், “கட்சியின் ஐந்தாண்டு சாதனைகள் மற்றும் வரும் ஐந்தாண்டுக்கான வாக்குறுதிகள் அடங்கிய துண்டறிக்கையை வீடு வீடாகச் சென்று கொடுக்கிறோம். ஆனால் பல மக்கள் அதை படிக்காமல் தெருவில் வீசி விடுகின்றனர். 

இதையும் படிங்க: அடக்கி வாசிங்க! உளறிக்கொட்டி வாங்கிக்கட்டிக்காதீங்க!! திமுக நிர்வாகிகள், அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

பின்னர் மேலிட பொறுப்பாளர்கள் பகுதிக்கு வரும்போது துண்டறிக்கை இல்லாததால் எங்களை திட்டுகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவே இந்தப் புதிய முறையைக் கையாண்டு வருகிறோம்” என்றனர்.

இந்த உத்தியால் மக்கள் துண்டறிக்கையை உடனடியாக தூக்கி எறியாமல், பத்திரமாக வைத்துக் கொள்வதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். “எங்களுக்கு ‘கவனிப்பு’ செய்ய வரும்போது காட்ட வேண்டும் என்று சொன்னதும், பலரும் சிரித்தபடியே துண்டறிக்கையை உள்ளே எடுத்துச் செல்கின்றனர். சிலர் கேலி செய்தாலும், பெரும்பாலானோர் அதை பாதுகாப்பாக வைக்கிறார்கள்” என்று அவர்கள் மேலும் கூறினர்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் இந்த முறை தீவிரமாக பின்பற்றப்படுகிறது. துண்டறிக்கையில் தி.மு.க. அரசின் கடந்த ஐந்தாண்டு சாதனைகளுடன், எதிர்கால வாக்குறுதிகளும் எளிய மொழியில் அச்சிடப்பட்டுள்ளன. 

இந்த வித்தியாசமான பிரசார உத்தி தேர்தல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் இதை “புதுமையான யுக்தி” என்று பாராட்டினாலும், சிலர் “மக்களை மிரட்டி துண்டறிக்கை வாங்கும் முறை” என்று விமர்சிக்கவும் செய்கின்றனர். 

எனினும், தி.மு.க.வினர் இந்த முறையால் மக்களிடம் தங்கள் வாக்குறுதிகள் எட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக நம்புகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், துண்டறிக்கை பாதுகாப்பு உத்தி தி.மு.க.வின் பிரசாரத்தில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு கீழ்த்தரமாக விமர்சிக்கும் இபிஎஸ்..!! பரப்புரையில் கனிமொழி குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share