சிலரை திருத்தவே முடியாது! சண்முகத்திற்கு எதிராக களமிறங்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் மறைமுக தாக்கு!
'இடையூறு ஏற்படுத்தும் சிலரை திருத்தவே முடியாது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனி சாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் தேர்தல் தோல்விக்கு பின் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட அரசியலில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சண்முகத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, அ.தி.மு.க.,வின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதுவரை நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என கூறப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட செயலர் மாற்றத்துக்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் அதிகளவில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு பதிலாக மாவட்ட செயலராக நியமிக்கப்பட்ட பசுபதி, தனது ஆதரவாளர்களுடன் அதிக எண்ணிக்கையில் தொண்டர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும்!! அதிமுக நிர்வாகிகளுக்கு தெம்பூட்டிய எடப்பாடி பழனிசாமி!
நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்தில் அதிக கூட்டத்தை பார்த்த பழனிசாமி உற்சாகமடைந்ததாகவும், முதன்முறையாக அலுவலக பால்கனியில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் நிலவி வந்த பிரச்னைகள் குறித்து நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் செயல்பாடுகள் குறித்து சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த பழனிசாமி, “விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. இனி எந்த இடையூறும் இல்லாமல் வேகமாக செயல்பட வேண்டும். சிலரை திருத்தவே முடியாது; அவர்களை பற்றி கவலைப்படாமல் கட்சி பணிகளை தொடருங்கள்” என கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் எதிர்காலத்தில் இடைத்தேர்தல் வந்தால், அந்த மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டத்துக்கு பிறகு பேசிய புதிய மாவட்ட செயலர் பசுபதி, சண்முகத்தின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், தற்போது தொண்டர்கள் சுதந்திரமாக செயல்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், விழுப்புரத்தை சேர்ந்த 1,150 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும், சிலரது கையெழுத்துகள் போலியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
விழுப்புரம் அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், வரும் நாட்களில் மாவட்ட அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய நிர்வாகிகள் மற்றும் புதிய அணியினருக்கு இடையேயான போட்டி கட்சிக்குள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “எங்களுக்கு ஜனநாயகன் வேண்டாம்... ஜனநாயகம் வேண்டும்!” முதல்வர் விஜய்யை குறிவைத்து அதிமுக அதிரடி கேள்வி!