×
 

தேதி குறிச்சாச்சு... கிரீன் சிக்னல் கொடுத்த செங்கோட்டையன்... எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 5ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

 இந்த பாராட்டு விழாவில் விழா மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதன் மூலம் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமி இடையே இருந்த மோதல் நேரடியாக வெளிப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாஜகவுடன் எந்த விதத்திலும் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அனைத்து இடங்களிலும் பேசி வந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணியால் மட்டுமே வெற்றி பெற முடியும் என சூசகமாக மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை மறைமுகமாகவே மேடைகளில் பேசி வந்தார். இதற்காக கடந்த காலங்களில் அதிமுகவுடன் வைக்கப்பட்ட கூட்டணிகள் குறிப்பாக ஜெயலலிதா,ஜானகி அணி என இரு அணிகளாக  பிரிந்து இருந்த காலகட்டங்களில் அப்போதைய கூட்டணிகள் தொடங்கி கடந்த காலங்கள் வரைக்கும் குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படிங்க: ஒரே மேடையில் இபிஎஸ் - அண்ணாமலை... மூப்பனார் நினைவிடத்தில் சுவாரஸ்ய நிகழ்வு...!

 அதைத்தொடர்ந்து பாஜகவுடன் தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி வைத்ததை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் மவுனமானார். ஆனால் அதன் பின்னர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, கட்சியில்  கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியில் காணப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியிலிருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை.

இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்த நிலையில் கட்சியிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோயிலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம், 5ம் தேதி கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்தக் கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்தும்,  கட்சியில் தொடர்வதா என்பது குறித்தும் அவரது ஆதரவாளிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக  கூறப்படுகிறது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் கே.ஏ.செங்கோட்டனின் தற்போதைய நிலைப்பாட்டால் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவின் அடிமடியில் கைவைத்த அமித் ஷா... ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share