×
 

அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வரணும்!! எப்படியாவது முடிச்சிருங்க!! டெல்லிக்கு போன ரிக்வெஸ்ட்!

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால், பிரிந்துள்ள பா.ம.க.வை ஒன்றிணைக்க வேண்டும். த.வெ.க.வையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூட்டணி) தயாராகி வரும் நிலையில், கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

ஏற்கனவே அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டணியில் இடம்பெற ஒப்புக்கொண்டுள்ளன. இந்நிலையில் மேலும் சில கட்சிகளை இணைக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சமீபத்தில் மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றிருந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கேட்டு திமுகவுக்கு நெருக்கடி! கேரளாவை சுட்டிக் காட்டி செக் வைக்கும் காங்.,! வலுக்கும் கோஷம்!

இந்த சந்திப்பின்போது, வரும் தேர்தலில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெற வேண்டுமானால், பிரிந்து நிற்கும் பா.ம.க.வை ஒன்றிணைப்பதுடன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தையும் (த.வெ.க.) கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக ராமதாஸ் தரப்பு மற்றும் விஜய் தரப்புடன் பா.ஜ.க. தலைவர்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், அண்ணாமலை ஏற்கனவே விஜய்க்கு கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அ.தி.மு.க. தரப்பிலும் விஜயிடம் பேச்சு நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த முறை தமிழகத்துக்கு வருவதற்கு முன்பாகவே தே.ஜ.கூட்டணி மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தே.ஜ.கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதால், அதற்குள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ள அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 2026 தேர்தலில் தே.ஜ.கூட்டணி எத்தகைய வியூகத்துடன் களமிறங்கும் என்பதை இந்தப் பேச்சுவார்த்தைகள் தீர்மானிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: 30 சீட்டு!! ஒரு எம்.பி போஸ்ட்டு!! எடப்பாடிக்கு பிரேமலதா வைக்கும் நிபந்தனை! கூட்டணியில் இழுபறி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share