×
 
☰

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பின்னடைவு! ₹25,000 அபராதம் உறுதி!

குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆர்டிஐ சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் தகவல் கோரப்பட்டதாகவும், வழக்கில் செலவுத் தொகை விதிப்பது அவசியம் என்றும் வாதிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி மற்றும் பட்டப்படிப்பு தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் செலவுத் தொகையையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்று கோரி 2016-ல் கெஜ்ரிவால் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். இதையடுத்து, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் மோடியின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2023 மார்ச் 31-ம் தேதி தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் செலவுத் தொகையும் விதித்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை பதிவு செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார்.

இதையும் படிங்க: அத்வானி, ஜெகதீப் தன்கர், ரேகா குப்தா, கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்! வாக்காளர் பட்டியலில் குளறுபடி! டெல்லி SIR-ல் அடுத்த அதிர்ச்சி!

இந்த மேல்முறையீட்டை தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் மற்றும் நீதிபதி டி.என். ரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அபராதம் விதித்ததற்கான காரணங்களை எதிர்த்து வாதிட்டார். தகவல் ஆணையம் தானாகவே நடவடிக்கை எடுத்ததாகவும், கெஜ்ரிவால் முறையான ஆர்டிஐ விண்ணப்பம் தாக்கல் செய்யவில்லை என்றும் அவரது தரப்பு வாதிட்டது.

மறுபுறம், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆர்டிஐ சட்டத்தின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் தகவல் கோரப்பட்டதாகவும், வழக்கில் செலவுத் தொகை விதிப்பது அவசியம் என்றும் வாதிட்டார்.

அனைத்து வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், தனி நீதிபதியின் தீர்ப்பில் தலையிட வேண்டிய பிழை எதுவும் இல்லை எனக் கூறி கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. இதனால் 2023-ல் விதிக்கப்பட்ட ரூ.25 ஆயிரம் செலவுத் தொகையும் தொடர்கிறது. இந்த வழக்கு தொடர்பான சட்டப் போராட்டம் 2016 முதல் நீடித்து வந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டு கட்டத்தில் குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: சென்னைக்கு படை எடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி! பலத்தை காட்ட தயாராகும் பாஜக - காங்.,!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share