சென்னைக்கு படை எடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி! பலத்தை காட்ட தயாராகும் பாஜக - காங்.,!
ஒரே நகரில் ஒரு நாள் இடைவெளியில் ராகுல் காந்தியும் பிரதமர் மோடியும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், இரு கட்சிகளின் தமிழக அமைப்பு ரீதியான ஏற்பாடுகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் அடுத்தடுத்து சென்னை வர உள்ள நிலையில், இரு கட்சிகளும் தங்களது நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அக்டோபர் 10-ம் தேதி ராகுல் காந்தியும், அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடியும் சென்னையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
ராகுல் காந்தி அக்டோபர் 10-ம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறும் “மாணவர்களின் குரல்” நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. மாணவர்கள் பதிவு செய்வதற்காக கியூஆர் குறியீடு மூலமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சிக்கு அதிகளவில் மாணவர்களை அழைத்து வர காங்கிரஸ் தரப்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ராகுல் காந்தி விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்லும் வழியிலும் தொண்டர்களை திரட்டுவது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுகவுக்கு அழைப்பு? எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ராகுல்காந்தி திட்டம்?
இதற்கு மறுநாளான அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்தின் முக்கிய வழித்தடத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை மெட்ரோ ரெயிலில் பிரதமர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருகையையொட்டி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு ஒரே நகரில் ஒரு நாள் இடைவெளியில் ராகுல் காந்தியும் பிரதமர் மோடியும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், இரு கட்சிகளின் தமிழக அமைப்பு ரீதியான ஏற்பாடுகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 2029 தேர்தலுக்கு இப்போவே குறி! தமிழகம் வரும் ராகுல் காந்தி... மாணவர்களுடன் நடக்கப்போகும் மெகா சந்திப்பு!