தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாத அரசு ஊழியர்கள்!! 19,600 பேர் ஆப்சென்ட்!! சென்னையில் மோசம்!
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம், 85 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றாலும், அரசு ஊழியர்கள், போலீசார் தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தேர்தல் ஆணையம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தமிழக சட்டசபைத் தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம் 85 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் ஓட்டு போட ஆர்வம் காட்டாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 74,089 பேர் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள். இந்த முறை 24,22,097 பேர் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 83.71 சதவீத ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் சென்னையில் 59.24 சதவீத ஓட்டுப்பதிவுதான் இருந்தது. அப்போது 40 லட்சம் வாக்காளர்களில் 24,03,495 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். இந்த முறை 18,602 ஓட்டுகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. 2024 லோக்சபா தேர்தலைவிடவும் 2,41,504 ஓட்டுகள் அதிகம் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: போலீசாரை அசிங்கமாக திட்டிய அதிமுக வளர்மதியின் கணவன்!! வழக்குபதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 2021ல் 1,71,656 ஓட்டுகள் பதிவான நிலையில், இந்த முறை 1,82,364 ஓட்டுகள் பதிவாகி 10,708 ஓட்டுகள் அதிகரித்துள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 2021ல் 1,99,410 ஓட்டுகள் பதிவானதைவிட இந்த முறை 3,647 ஓட்டுகள் அதிகமாக 2,03,057 ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு ஆர்.கே.நகர் தொகுதியில் 90.53 சதவீதமாக இருந்தாலும், 2021 உடன் ஒப்பிடும்போது இங்கு 6,163 ஓட்டுகள் குறைவாக பதிவாகியுள்ளது.
இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் ஓட்டு மூலம் ஓட்டளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் 52,047 பேருக்கு தபால் ஓட்டு வசதி இருந்த நிலையில், 32,447 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். மீதமுள்ள 19,600 பேர் தபால் ஓட்டு போடவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தீவிர முயற்சிகளால் ஒட்டுமொத்த ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்ந்திருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாரின் தபால் ஓட்டு பங்கேற்பு குறைவு அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: வாக்குறுதிகளை கிடப்பில் போட்ட திமுக! அதிருப்தியில் அரசு ஊழியர்கள்! யாருக்கு போனது ஓட்டு?!