×
 

நான் மோடிக்கு விசுவாசமான நாய்; ஜால்ரா அடிக்க மாட்டேன் - அருண் ராஜ்-க்கு அண்ணாமலை பதிலடி

நான் பிரதமர் மோடிக்கு விசுவாசமான நாய். நன்றியுள்ள நாயாகவே இருப்பேன் என்று அண்ணாமலை மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற பகவத் கீதை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசின் புதிய 'விக்சித் பாரத்' (Viksit Bharat) திட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு மாற்றங்கள் மற்றும் தவெக நிர்வாகியின் விமர்சனங்களுக்குத் தனது பாணியில் அதிரடி பதில்களை அளித்தார்.

சின்மயா மிஷன் மூலம் பகவத் கீதையை முழுமையாகத் தமிழில் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 125 ஸ்லோகங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து, கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் வெளியிட்டார். இன்று 18 அத்தியாயங்களும் 18 ராகங்களில் தமிழில் வெளிவந்திருப்பது நாம் செய்த பாக்கியம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அவர் விரிவான விளக்கம் அளித்தார், 20 ஆண்டுகள் பழமையான இத்திட்டத்தை வளர்ந்த இந்தியாவை நோக்கி நகர்த்த 'விக்சித் பாரத்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது பெயரை மாற்றுவது மட்டுமல்ல, திட்டத்தைச் சீர்மைப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது. வேலை நாட்களை 100-லிருந்து 125 நாட்களாகப் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: "The Great Honour Nishan of Ethiopia": எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவம்..!!

பஞ்சாயத்தில் வேலை கேட்டு 15 நாட்களில் வேலை வழங்கப்படாவிட்டால், கட்டாயமாக வேலையில்லா கால உதவித்தொகை வழங்கப்படும். இது ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இருந்த நடைமுறை, இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதுவரை 100% மத்திய அரசு நிதி வழங்கிய நிலையில், இனி 60% மத்திய அரசும், 40% மாநில அரசும் வழங்க வேண்டும். உருவாவதோ மாநிலத்தின் சொத்து, எனவே மாநில அரசும் பங்களிக்க வேண்டும் என்பதே விதியாகும்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறிவிட்டு 4 ஆண்டுகளாகச் செய்யவில்லை. அதை எதிர்த்துக் காங்கிரஸ் ஏன் போராடவில்லை? உத்தரப்பிரதேசத்தை விடக் குறைவான கிராமப்புறங்களைக் கொண்ட தமிழகத்திற்குத்தான் பிரதமர் மோடி அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு போன்ற இடங்களில் இத்திட்டத்தில் 90% ஊழல் நடப்பதை ஆதாரத்துடன் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் எனச் சாடினார்.

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜின் விமர்சனத்திற்கு அண்ணாமலை அளித்த பதில் வைரலாகி வருகிறது. அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆம், நான் உண்மையை மட்டுமே பேசும் நாய்; யாருக்கும் ஜால்ரா அடிக்காத நாய். நான் நன்றியுள்ள நாய், என் தலைவர் மோடிக்கு விசுவாசமான நாய். ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட பதவி எனக்குத் தேவையில்லை.

காந்தியின் பெயரால் அரசியல் செய்யும் திமுக-விடம் கேட்கிறேன்; எத்தனை திட்டங்களுக்குக் காந்தி பெயரை வைத்தீர்கள்? பிரதமர் மோடிதான் ஸ்வச் பாரத் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்குக் காந்தி பெயரை வைத்தார். தேசத்தந்தையை நாங்கள் எப்போதும் கௌரவிக்கிறோம். விக்சித் பாரத் என்பது வளர்ந்த இந்தியாவைக் குறிக்கும் சொல்லே தவிர, அதில் பாஜகவின் சித்தாந்தப் பெயர் இல்லை," என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: 100 நாள் வேலை பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share