புதியதாக பிறந்ததைப் போல் பூரிக்கிறேன்!” - தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி
தவெக தலைவர் விஜயை சந்தித்த தருணத்திலிருந்து புதியதாக பிறந்ததைப்போல் பூரிக்கிறேன் என்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கத்தின் முக்கியச் சொற்பொழிவாளராகக் கருதப்பட்ட நாஞ்சில் சம்பத், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைச் சந்தித்து முறைப்படித் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். இணைந்த பின் உற்சாகத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், தி.மு.க.வின் அறிவாலயத்தில் தான் எதிர்கொண்ட புறக்கணிப்புகளையும், புதிய அரசியல் பயணத்தின் பூரிப்பையும் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்த தருணத்தைப் பற்றிப் பேசிய நாஞ்சில் சம்பத், "புதியதாகப் பிறந்ததைப் போல் பூரிக்கிறேன்" என்று உணர்ச்சிப் பூரிப்புடன் தெரிவித்தார். எந்தத் திசைக்கு போக வேண்டும் என்பதைத் தெப்பம் (Raft) தீர்மானிக்க முடியாது; தண்ணீர் தான் தீர்மானிக்கும். நானொரு தெப்பம்; என்னுடைய திசையைத் தம்பி விஜய் தீர்மானித்திருக்கிறார், என்று இலக்கிய நடையில் தன் முடிவை விளக்கினார்.
இன்று தம்பி விஜய்யைச் சந்தித்த பொன் வேளையில் இருந்து புதிதாய் பிறந்ததைப் போல் எண்ணி நான் கூறுகிறேன். கடந்த காலக் கசப்புகள், காயங்களில் இருந்து விடுபட்டவராக என்னை உணர்கிறேன்; உற்சாகமான மனநிலையில் உள்ளேன்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய திருப்பம்! தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
விஜய் தன்னை வரவேற்றபோது அவர் கூறிய வார்த்தைகள் குறித்து நாஞ்சில் சம்பத் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். என்னைப் பார்த்து, 'நான் உங்கள் ஃபேன்' என விஜய் கூறினார். விஜய் அப்படிச் சொன்னதும் தான் மெய்சிலிர்த்துப் போனதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
ஆறு ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் இணைத்துக் கொள்ளாமல், திராவிட இயக்கத்தின் சொற்பொழிவாளராகப் பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான், இன்று தவெக-வில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார்" என்று தனது புதிய பணியின் நோக்கத்தை நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பொதுக்கூட்டமே நடத்துறோம்.. அனுமதி கேட்டு காவல்துறையிடம் தவெக புதிய மனு!
பெரியார், அண்ணா லட்சியங்களைப் பேசி வந்த நான், இன்றைக்குத் தவெக-வில் இணைந்து, நாடு முழுக்க தவெகவிற்கு பகுதி வாரியாகப் பிரச்சாரம் மேற்கொள்ளத் தம்பி விஜய் என்னை அனுமதித்திருக்கிறார்." மேலும், பெரியாரையும் காமராஜரையும் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்புக்கு வழிகாட்டும் தலைவர் விஜய் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.