பிள்ளையார் சுழியா? சூறாவளியா?... விஜயை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் போட்ட மெகா கணக்கு... சைலண்ட் மோடில் தவெக...!
அதிமுக தவெக கூட்டணி அமைய என்னென்ன சாத்தியங்கள் இருக்கிறது? யார் சமரசம் செய்ய வேண்டும்? ஒருவேளை அதிமுக தவெக கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு என்னென்ன சவால்கள் காத்திருக்கிறது என்பது குறித்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.
அதிமுக பிரச்சார கூட்டத்தில் விஜயின் தவெக கொடியை பார்த்து உற்சாகம் அடைந்த எடப்பாடி பழனிசாமி. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டதாக சூசகமாக பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனிக்க வைத்திருக்கும் நிலையில், அதிமுக தவெக கூட்டணி அமைய என்னென்ன சாத்தியங்கள் இருக்கிறது? யார் சமரசம் செய்ய வேண்டும்? ஒருவேளை அதிமுக தவெக கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு என்னென்ன சவால்கள் காத்திருக்கிறது என்பது குறித்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.
கரூர் துயரம் நிகழ்ந்ததும் அதிமுகவும் பாஜகவும் விஜய் மீது காட்டும் பாசமும் பரிவும் 2026 தேர்தலில் கூட்டணி கணக்கை மாற்றுமா என்ற தீவிர விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்ததும் விஜய் மீது குற்றம்சாட்டி திமுகவினர் பேசி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டி தான் கரூர் நிகழ்வுக்கு காவல்துறையின் அலட்சியமும் காரணம் என்ற கோணத்தில் யோசிக்க வைத்தது. கரூர் துயர சம்பவம் குறித்து தவெக தரப்பில் யாருமே பேசாத நிலையில் எடப்பாடி பழனிசாமி பேசிய அனைத்தும் தவெகவுக்கு சாதகமாக இருக்கவே சில நாட்களுக்கு முன்பு கூட தருமபுரிக்கு சுற்று பயணம் சென்ற எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தவெகவினர் பேனர் வைத்திருந்த நிகழ்வுகளும் அரங்கேறின.
இந்த சூழலில் அதிமுகவின் பிரச்சார கூட்டங்களில் பறந்த தவெக கொடியை பார்த்த எடப்பாடி பழனிசாமி முகம் நிறைய பூரிப்புடன் வலிமையான கூட்டணி அமையும் என பேசியிருந்தார். இதுகுறித்து தமிழக வெற்றி கழகம் தரப்பில் யாருமே அதிகாரப்பூர்வமாக வாய் திறக்காத சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தவெகவை அதிமுக பக்கம் நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறதா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது. மேலும் விஜயின் மௌனத்தை பயன்படுத்தி தவெக தங்கள் பக்கம் தான் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இது வெட்கக்கெடு BRO... அஜித்திற்கு வந்தால் தக்காளி சட்னி... விஜய்க்கு வந்தால் ரத்தமா? - அம்பலமான தவெக...!
கரூர் சம்பவம் தொடர்பான நெருக்கடிகளை சமாளித்த பின்னர் கூட்டணி குறித்து பேசி கொள்ளலாம் என்றும் முடிவில் விஜய் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுகவும், பாஜகவும் வெளிப்படையாக விஜயை தாங்கி பிடித்து, பரிந்து பேசி, ஆதரவு கரம் நீட்ட தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை விஜய் எடுக்கும் பட்சத்தில், அவர் எந்தெந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய இருக்கிறது என்பதை அலசி ஆராய வேண்டி உள்ளது. மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் உங்கள் விஜய் என மக்கள் சந்திப்பை தொடங்கி இருக்கும் விஜய் தாம் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற இடத்திலிருந்து இறங்கி அதிமுக தலைமையை ஏற்க வேண்டிய சூழல் வரும்.
அதேபோல முதல் தேர்தலை சந்திக்கும் விஜய் எவ்வளவு தொகுதியில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி பலத்தை பரிசோதிப்பார் என்பதும் கேள்வியாக உள்ளது. மேலும் கொள்கை எதிரியாக இருக்கும் பாஜக இருக்கும் அணியில் கூட்டணி வைக்க முடிவு செய்தால் அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது. மேலும் கட்சி தொடங்கியதிலிருந்து திமுக Vs தவெக என விஜய் கூறி வந்த நிலையில், ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மீண்டும் தேர்தல் களம் அதிமுக Vs திமுக என்ற நிலைக்குதான் மாறும் இது தவெகவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
இதே போல விஜயுடன் கூட்டணி என்றால், அதிமுக எந்தெந்த விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும். அந்த வகையில் தமிழக அரசியல் வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத கூட்டணி ஆட்சி என்ற விஷயத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் வரும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற கணக்கில் ஆட்சியில் பங்கு கொடுக்கும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிப்பாரா? என்பதும் சந்தேகத்திற்குரிய விஷயமே. அத்துடன் கூட்டணிக்காக குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டிய சூழல் வரும். மேலும் அதிமுக வலுவாக இருக்கும் கொங்கு மண்டலங்களில் விஜய்க்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கும் நிலையில், அங்குள்ள தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டிய சூழலும் வரும். இது ஒரு பக்கம் இருக்க அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்தால் அது திமுகவின் வெற்றிக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
200 தொகுதிகள் வெல்வோம் என திமுக கூறி வரும் நிலையில் அந்த இலக்கை சாத்தியப்படுத்துவது சவாலாக மாறிவிடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏனென்றால் திமுகவின் வாக்கு வங்கியை விஜய் உடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் தவெக அதிமுகவுடன் சேர்வது திமுகாவின் வெற்றியை பாதிக்கவும் செய்யலாம் என்கிறார்கள். மேலும் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் சிறுபான்மையினர் வாக்குகளும் இந்த முறை விஜய் பக்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதால் தவெக அதிமுக கூட்டணி அமைவது திமுகவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது.
ஆனால் விஜய் அதிமுக கூட்டணியை தேர்வு செய்யாமல் தனித்து நிற்க முடிவு செய்தால், என்னென்ன சாதக பாதகங்கள் இருக்கிறது என்பதையும் ஆராய வேண்டியுள்ளது. தனது தலைமையில்தான் கூட்டணி என்ற முடிவில் விஜய் உறுதியாக இருந்தால், அடுத்த கட்டமாக சிறிய கட்சிகளை தனது பக்கம் இழுக்க வேண்டும். திமுகவில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தற்போதைக்கு வெளியேற வாய்ப்பு இல்லை என்றாலும், தேர்தல் நெருக்கத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இன்னொரு பக்கம் கடந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்து பயணித்த பாமக, தேமுதிக கட்சிகளை விஜய் தனது பக்கம் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அது நடந்தால் மட்டுமே விஜய் தலைமையில் வலுவான அணி அமையும். அப்படி இல்லை என்றால் 2026 தேர்தல் விஜய்க்கு வாக்கு வங்கியை பரிசோதிக்கும் இடைக்கால பரீட்சையாகவே மாறிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: இது புதுசா இருக்குண்ணே... தவெக தொண்டனை தொட்டால் அதிமுக சும்மா விடாது... பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்...!