×
 

“நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டிய சட்டமில்லை!” திருப்பரங்குன்றம் விவகாரம்!! அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி!

நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை தமிழக அரசியலை சூடேற்றி வரும் நிலையில், திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி கருத்து தெரிவித்துள்ளார். “நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும்” என்று பெரியசாமி தெரிவித்தார். 

அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், தவெகவில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் இணைந்தாலும் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22,000 பேர் நீக்கப்பட்டது மோசடி என்றும் குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல்லில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மேயர் இளமதி, காங்கிரஸ் மாநகர தலைவர் துரைமணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த பெரியசாமி, நிருபர்களிடம் பேசுகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொட்டார். 

இதையும் படிங்க: அயோத்தி மாதிரி தமிழகம் வருவதில் தப்பில்லை!! ராமராஜ்யம் வரும்!! திமுகவுக்கு 100 நாட்களே இருக்கு!

“தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் எடுபடாது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. உரிமைக்காக உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம். நல்ல தீர்ப்பு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தவெகவில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றோர் இணைந்தது குறித்து கேட்டதற்கு, “தவெக இன்னும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறவில்லை. யார் சேர்ந்தாலும் பிரிந்தாலும் எங்களுக்கு கவலையில்லை” என்று பெரியசாமி கிண்டலாக பதிலளித்தார். 

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தனது தொகுதியில் 22,000 பேர் நீக்கப்பட்டதாகவும், உயிருடன் இருக்கும் திமுக நிர்வாகியை இறந்தவராக காட்டியதாகவும் குற்றம் சாட்டினார். “பி.எல்.ஓ. அலுவலர்கள் வீடு வீடாக செல்லாமல் அறையில் உட்கார்ந்து மோசடி செய்கின்றனர். இதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி அளித்தும் திமுக அரசு தடுத்து வருவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. பாஜக, இந்து அமைப்புகள் “இந்து விரோதம்” என்று குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு பதிலடியாக பெரியசாமியின் “நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டியதில்லை” என்ற பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த கருத்து சட்ட வல்லுநர்களிடமும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் நினைவு நாளில் பேசிய பெரியசாமி, திமுகவின் நிலைப்பாட்டை உறுதியாக வைத்துள்ளார். ஆனால், “நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டியதில்லை” என்ற பேச்சு, திமுகவுக்கு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 2026 தேர்தலுக்கு முன் இது பாஜகவுக்கு புதிய ஆயுதமாக மாறலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: உரிமைகள் தொடர்ந்து பறிபோகும்!! அவமானம், அத்துமீறல்கள் தொடரும்! தி.குன்றம் விவகாரம்! பவன் கல்யாண் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share