மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு! துரைமுருகன் பரபரப்பு அறிவிப்பு!
முப்பெரும் விழா நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவில் கட்சியின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!
இதற்கிடையே, இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெற இருந்த முப்பெரும் விழாவும் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். ஸ்டாலினின் உடல்நிலை தொடர்பாக இதுவரை விரிவான மருத்துவ தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய தேதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Breaking News! இடைத்தேர்தலில் திமுக அதிரடி முடிவு! மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்