டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவிகள் மீது தடியடி? முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோடாலியில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தவெக அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியிருப்பது அதிர்ச்சிப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்படும் சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பள்ளி மாணவிகள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்தப் போராட்டத்தின் போது காவல்துறை நடத்தியதாகக் கூறப்படும் தடியடியில் நான்கு பள்ளி மாணவிகள் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடிய மாணவிகள் மீது வன்முறை நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்த முதலமைச்சர் விஜய், இந்த சம்பவம் குறித்து என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் குழந்தைகளுக்கு குறி வைக்கிறீங்களா?! ஆட்சி கவிழ்ந்திடும்னு பயமா விஜய்? நயினார் கேள்வி!
மேலும், தற்போதைய ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே மாறிவிட்டதாகவும், கோடாலி கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காயமடைந்த மாணவிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது காவல்துறை தரப்பின் விரிவான விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், நயினார் நாகேந்திரனின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பணம் கொடுக்குறது மட்டுமில்ல! இதுவும் லஞ்சம்தான்! முதல்வர் வழங்கிய அரசுப்பணி! விளாசும் நயினார் நாகேந்திரன்!