ராகுல் பேசுவது வருத்தமளிக்கிறது! விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் பதிலடி!
ஜனநாயகன் திரைப்பட விவகாரத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை; அடிப்படை தெரியாமல் ராகுல் காந்தி பேசுவது வருத்தம் என நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் சிபிஐ (CBI) மற்றும் சென்சார் போர்டு அமைப்புகளுக்கும் பாஜக-விற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இதுகூடத் தெரியாமல் ராகுல் காந்தி பேசுவது வருத்தமளிக்கிறது எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, பிரதமர் மோடியின் தமிழக வருகை, ராகுல் காந்தியின் விமர்சனங்கள் மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துத் தனது பாணியில் அதிரடியான பதில்களை முன்வைத்தார். குறிப்பாக, கரூரில் நடந்த துயரச் சம்பவத்திற்கு பாஜக-வைக் குறை சொல்வது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
விமான நிலையத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், "வரும் 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைவர்களுடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அப்போது மேடையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்; அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே உறுதியாகிவிட்டன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜனநாயகன் படத்துக்கு ஏன் இவ்வளவு தடை? விஜய்க்காக சென்சார் போர்டை சாடிய மன்சூர்!
ராகுல் காந்தியின் தமிழகப் பயணம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், "ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தனியாக நின்றால் வெற்றி பெற்றுவிடுவாரா? சென்சார் போர்டு, அமலாக்கத் துறை போன்றவை தனித்தனி அமைப்புகள் என்பது கூடத் தெரியாமல் அவர் பேசுவது அபத்தமானது" எனச் சாடினார். மேலும், "கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குச் சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; இதற்கும் பாஜக-விற்கும் என்ன தொடர்பு? நாங்களா அங்குப் பொதுக்கூட்டம் நடத்தினோம்?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். ஜனநாயகன் பட விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளபோது அதனை அரசியல் ஆக்குவது சரியல்ல எனத் தெரிவித்த அவர், தை பிறந்தால் வழி பிறக்கும்; இந்தத் தை புத்தாண்டு தமிழக மக்களுக்கு விடியலைத் தரும் புதிய அரசை அமைக்கும் என நம்பிக்கையோடு கூறிப் புறப்பட்டார்.
இதையும் படிங்க: விஜய்யை வஞ்சக வலையில் வீழ்த்த பாஜக முயற்சி! தவெக-வுக்கு முத்தரசன் எச்சரிக்கை!