×
 

"திமுக மேடைகளில் நிராகரிப்பு... வயிற்றில் அடித்தார்கள்!" வசைச் சொற்களால் மனமுடைந்தேன்: நாஞ்சில் சம்பத் கண்ணீர்!

பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க.வில் தான் எதிர்கொண்ட நிராகரிப்புகள் மற்றும் மனக் காயங்களிலிருந்து விடுபட்டுத் தவெகவில் இணைந்துள்ளதாகத் தெரிவித்ததுள்ளார்.

திராவிட இயக்கத்தின் முக்கியச் சொற்பொழிவாளரான நாஞ்சில் சம்பத், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவர் விஜய்யைச் சந்தித்து முறைப்படி தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள 'Voice of Commons' அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திமுகவில் தான் எதிர்கொண்ட காயங்கள் குறித்தும், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் விரிவாகப் பேசினார்.

திமுகவில் இருந்தபோது தனக்கு நேர்ந்த காயங்கள் குறித்துப் பேசிய நாஞ்சில் சம்பத், தான் மனமுடைந்துபோன பல தருணங்களை விவரித்தார். திமுக-வின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். அறிவாலயத்திலிருந்து காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு வசைச் சொற்களால் என்னை வசைபாடினார்கள்; இதனால் மனமுடைந்துபோனேன்.

நான் ஏதோ நான்கு கூட்டங்கள் பேசி என்னுடைய நாட்களை நகர்த்தலாம் என்று பார்த்தால், அதையும் வயிற்றில் அடிப்பது மாதிரி என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. எந்தப் பரிந்துரைக்கும் திமுக-வினர் முன் நான் சென்று நிற்பதில்லை; கேட்டால் ஒரு சைக்கிள்கூட தரமாட்டார்கள்.  இந்தப் பழைய கசப்புகள் மற்றும் காயங்களிலிருந்து விடுபட்டவராக உணர்வதாகவும், தற்போது உற்சாக மனநிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய திருப்பம்! தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!

தவெக தலைவர் விஜய் திராவிடம் அல்லாத ஒரு கட்சியைத் தொடங்கினாலும், அதன் கொள்கைகள் குறித்துப் பேசுகையில், திராவிடம், திராவிடம் இல்லைன்னு யாரு சொன்னா உங்களிடம்? தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒண்ணுதான். திராவிட இயக்கத்தினுடைய நீட்சியாகத்தான், நான், தம்பி விஜய்யைப் பார்க்கிறேன்.
மேலும், தம்பி விஜய் இளைஞர்களை மூலதனமாக வைத்துக் கொண்டு அதிரடி மாற்றங்களைச் செய்வதற்குத் திட்டம் வைத்திருப்பதாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை உத்தரவு குறித்துக் குமுதம் இணையதளத்திற்குத் தான் அளித்த பேட்டி குறித்தும் நாஞ்சில் சம்பத் நினைவு கூர்ந்தார். அப்போது, "இது தவெக-வுக்குக் கிடைத்த வெற்றி, கையறு நிலையில் கைவிடப்பட்டு கண்ணீரோடும் தவெக அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிற நிலையில் தான் ஒரு புதிய வாசலைத் திறந்து வைத்திருக்கிறது" என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருப்பரங்குன்றம் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் விஜய் ஏன் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நாஞ்சில் சம்பத், 

"திருப்பரங்குன்றம் சம்பவத்தை வைத்து, 'குன்றம் எங்களுக்குக் குமரன் எங்களுக்கு' என்று சொல்லுகிறவர்கள், ஒரு கலவர அரசியலுக்குக் கை, கால் முளைக்க முடியுமா? என்று யோசிக்கிறார்கள். இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், ஒரு தரப்புக்கு எதிராகவும், கருத்து சொல்லாமல் இருப்பது, விஜய்யைப் பொறுத்தவரையில், அவருக்கு நல்லது." எது சரி என்று நினைக்கிறாரோ, அதை அவர் சொல்வதற்கு அவர் மௌனமாக இருப்பது ஒரு வகையில் நல்லது என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

பாஜகவினர் கலவர அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டிய அவர், விஜய் ஒரே நேரத்தில் டெல்லியில் அதிகாரத்தில் இருக்கும் கொள்கை எதிரியான பாஜகவையும், தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் திமுகவையும் எதிர்க்கும் துணிச்சலைப் பாராட்டுவதாகவும் கூறினார்.

அவர் கடைசியாகக் கட்சியிலிருந்து விலகி ஆறு வருட காலத்துக்குப் பிறகு தவெக-வில் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். தான் பிரச்சாரம் செய்வதையே வாழ்வாகக் கொண்டிருப்பதாகவும், அந்த வாய்ப்பைத் தம்பி விஜய் கொடுத்திருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பொதுக்கூட்டமே நடத்துறோம்.. அனுமதி கேட்டு காவல்துறையிடம் தவெக புதிய மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share