விஜய் கூட கூட்டணியா? அது எங்களுக்கு தப்பா போயிரும்!! டெல்லியில் உடைத்து பேசிய அமித்ஷா!
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க பாஜக ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டைம்ஸ் நவ் மாநாட்டில் பேசிய அமித் ஷா, “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்தவித முயற்சியும் பாஜக செய்யவில்லை. அவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வந்தாலும், அது எங்களின் வாக்கு வங்கியை எதிர்மறையாக பாதிக்கும் என்றே நான் கருதுகிறேன்” என்று தெளிவாகக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்.டி.ஏ.) பொறுத்தவரை அதிமுகதான் மூத்த சகோதரர். அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். அவர்களுடனான கூட்டணியே எங்களுக்கு வலிமை சேர்க்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக பெரும் அதிருப்தி அலை வீசி வருகிறது. இந்த அதிருப்தியை முழுமையாக பயன்படுத்தி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.டி.ஏ. வலுவான பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெறும்” என்றார்.
இதையும் படிங்க: விஜய் விருப்பத்துக்கு ஓகே சொன்ன அமித்ஷா! தனித்து போட்டியிடும் தவெக! டெல்லி கொடுத்த ஐடியா?!
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பாஜக - தவெக கூட்டணி பற்றிய செய்திகள் மற்றும் ஊகங்கள் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், அமித் ஷாவின் இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜகவும் அதிமுகவும் நீண்டகாலமாக நெருக்கமான கூட்டணியில் இருந்து வரும் நிலையில், தவெகவை உள்ளடக்கிய புதிய கூட்டணி வாய்ப்பு குறித்த விவாதங்கள் எழுந்திருந்தன.
அமித் ஷா தனது உரையில், தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும், இந்தச் சூழலை என்.டி.ஏ. சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. அமித் ஷாவின் இந்த அறிவிப்பு, பாஜக - அதிமுக கூட்டணியே தொடரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
என்.டி.ஏ. கூட்டணி தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
இதையும் படிங்க: எலெக்ஷன்ல எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க!! தேஜ கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!