முதல்வர் விஜயுடன் ப.சிதம்பரம் ஆலோசனை! ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,?! திடீர் பரபரப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதனை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும்படி கோரிக்கை விடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து வரும் வரிசையில் சிதம்பரத்தின் சந்திப்பு குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை சிதம்பரம் விஜயை சந்தித்தார். அப்போது அவர் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வமாக இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இரு தலைவர்களும் தமிழக அரசியல் சூழல், புதிய அரசின் நிர்வாகக் கொள்கைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து சுருக்கமாக கலந்துரையாடியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?
குறிப்பாக, தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கித் தருமாறு சிதம்பரம் முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இரு தரப்பிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) ஆட்சி அமைத்துள்ள சூழலில், காங்கிரஸ் உட்பட பல கட்சிகளுடன் இணக்கமான உறவை பேணி வருகிறது. இந்த சந்திப்பு இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் த.வெ.க., முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஒரு தேசியக் கட்சியின் மூத்த தலைவர் அவரை சந்தித்துள்ளதால் இந்த சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வரும் நாட்களில் தமிழக அரசியலில் புதிய கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் சூழல் உருவாகுமா என்பதை இந்த சந்திப்பு பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனித்துப்போட்டி இனி வேலைக்கு ஆகாது!! கூட்டணி கதவை திறக்க சீமான் ஆலோசனை! தம்பிகள் அதிர்ச்சி!