என் ஆளுங்க 3,000 பேர் இன்னும் இந்தியாவுல தான் இருக்காங்க! பாக்., பயங்கரவாதி ஷசாத் பாட்டி பரபரப்பு வீடியோ!
தனது அமைப்பை சேர்ந்த 3,000 பேர் இன்னும் சுதந்திரமாக இருப்பதாக அவர் கூறியிருப்பது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியாவில் தனது அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறி கைது செய்யப்பட்டவர்களை தன்னுடைய கூட்டாளிகள் அல்ல என்று பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஷசாத் பாட்டி தெரிவித்துள்ளார். மேலும், தனது அமைப்பை சேர்ந்த சுமார் 3,000 பேர் இன்னும் சுதந்திரமாக இருப்பதாக அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ரவுடியாக செயல்பட்டு பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவராக மாறியதாக கூறப்படும் ஷசாத் பாட்டியை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவில் தனது அமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முயன்றதாகவும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு அமைப்புகளும் மாநில போலீசாரும் இணைந்து பல்வேறு மாநிலங்களில் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவ சதி? டெல்லி போராட்டத்தை குறிவைத்த பயங்கரவாதி? அதிர்ச்சி தகவல்!
இந்த நடவடிக்கையில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஷசாத் பாட்டியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படும் வீடியோவில் ஷசாத் பாட்டி, சமீபத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தனது கூட்டாளிகள் அல்ல என்றும், அவர்கள் வேறு அரசியல் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் தொடர்பான விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தனது அமைப்பை சேர்ந்த 3,000 பேர் இன்னும் சுதந்திரமாக இருப்பதாக அவர் கூறியிருப்பது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தை பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட மற்றும் நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே உத்தர பிரதேசத்தில் ஷசாத் பாட்டியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 175 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 52 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, 12 வழக்குகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஷசாத் பாட்டி வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில் இடம்பெற்றுள்ள கூற்றுகளை தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் உண்மையில் தொடர்பு உள்ளதா என்பது விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியதாகும்.
இதையும் படிங்க: மேற்காசியா பதற்றம் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம்!! முக்கிய ஆலோசனை!