×
 

பாமக செயற்குழு தீர்மானங்கள்: 2026 தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் எடுப்பதே இறுதி முடிவு!

சேலத்தில் செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வை முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை டாக்டர் ராமதாஸுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான செயற்குழு கூட்டம் இன்று சேலத்தில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கட்சியை மீட்டெடுத்த மருத்துவர் ஐயாவிற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முழு அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர் தனி இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, மது ஒழிப்பு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 27 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி குறித்துத் தேவையற்ற அறிவிப்புகளை வெளியிட்டவர்களுக்குச் செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சேலத்தில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. டெல்லி உயர்நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி பாமக-வை மீட்டெடுத்த சட்ட வல்லுநர்களுக்கும், மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கும் இச்செயற்குழு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.

இதையும் படிங்க: ராமதாஸ் தலைமையில் சேலம் பொதுக்குழு உறுதி! - அன்புமணி தரப்புக்கு ஜி.கே.மணி பதிலடி!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 'வெற்றி கூட்டணி' அமைக்கும் முழு அதிகாரத்தையும், வேட்பாளர்களைத் தேர்வு செய்து அங்கீகரிக்கும் ஏ மற்றும் பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரத்தையும் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சியின் உயிர்நாடிக் கொள்கையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் அடுத்தகட்டப் போராட்டங்களை முன்னெடுக்கச் செயற்குழு முடிவு செய்துள்ளது.

முக்கியமாக, 46 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த கௌரவத் தலைவர் ஜி.கே.மணி அவர்களை, கட்சிக்குத் தொடர்பில்லாத நபர்கள் நீக்குவதாக அறிவித்ததற்கு இச்செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்தது. பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கம். அவருக்கு பதிலாக ஸ்ரீகாந்தியை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.

பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்தி ராமதாஸ் அவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மது ஒழிப்பு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளுக்கு முன்வைக்கப்பட்டன. சேலம் இரும்பாலைக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிலத்தைத் திரும்ப வழங்க வேண்டும் அல்லது வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உள்ளூர் கோரிக்கையும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: ராமதாஸ் போன்ற தலைவரை கொச்சைப்படுத்தலாமா? கொந்தளித்த ஜி.கே. மணி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share