×
 

முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

முதன்மை சாட்சியை மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் காவல்துறை அதிகாரிகளா அல்லது உயர் அதிகாரத்தில் உள்ளவர்களா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமான, அஜித்குமார் தாக்கப்படும் காணொளியை எடுத்தளித்ததுடன், நீதிமன்றத்தில் நேர்நின்று துணிவுடன் சாட்சியம் அளித்த தம்பி சக்தீஸ்வரன், அக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா தரப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.தம்பி அஜித்குமார் படுகொலையால் மக்கள் மனங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, எதிர்கட்சிகள் கடுமையாகக் கண்டித்து, உயர்நீதிமன்றமும் தலையிட்ட பிறகு, வேறுவழியின்றி காவலர்கள் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்தது.

ஆனால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகும் முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சல் தொடர்புடைய காவலர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்த துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? காவல்துறை அதிகாரிகளா அல்லது உயர் அதிகாரத்தில் உள்ளவர்களா? அல்லது ஆளுங்கட்சிக்கு ஏற்படும்  அவப்பெயரைத் தடுக்க அரசே மறைமுகமாக மிரட்டுகிறதா? கோயில் கண்காணிப்புக் கருவி (சிசிடிவி) காட்சிகளைப் பறித்து சென்ற திமுக அரசின் காவல்துறை கரங்களில் சிக்காமல், தன்னிடமிருந்த காணொளி ஆதாரத்தை மிகப்பாதுகாப்பாக நீதிமன்றத்தில் கொண்டு சேர்த்த தம்பி சக்தீஸ்வரனின் புத்திசாலித்தனத்தையும், நேர்நின்று சாட்சியம் அளித்த நெஞ்சுரத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இதையும் படிங்க: #BREAKING: சீமான் மீது டிஐஜி வருண் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இடைக்கால தடை விதிப்பு.. கோர்ட் தடாலடி!

காவல்துறையின் அதிகாரக் கொடுங்கரங்களுக்கு அஞ்சாமல் சாட்சியம் சொன்ன சக்தீஸ்வரன் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளுக்கும் உயிர்ப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளைத்தான் திமுக அரசால் தடுக்க முடியவில்லை; தன் கையில் உள்ள காவல்துறையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடு. குறைந்தபட்சம் சாட்சிகளுக்காவது பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு உரிய பாதுகாப்பு வழங்க மறுப்பது மாண்பமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலோடு மட்டுமின்றி, திரைமறைவில் குற்றவாளிகளைத் தப்புவிக்க முயலும் சூழ்ச்சியாகும். ஏற்கனவே, கனிமவளக்கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி பாதுகாப்பு அளிக்க முறையிட்டும் உரிய பாதுகாப்பை திமுக அரசு அளிக்க தவறிய காரணத்தினால்தான் புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை செய்யப்பட்டார். ஆகவே, திருப்புவனம் அஜித்குமார் படுகொலை வழக்கில் சாட்சியம் அளித்த அனைவருக்கும் உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள்... சீமான் பகீர் ரிப்போர்ட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share