×
 

'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

த.வெ.க. எம்.எல்.ஏ. குதிரைப் பேரம் வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், அரசியல் பழிவாங்கல் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை முன்ஜாமீன் அடிப்படையில், செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர். இந்த வழக்கு, த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்டத்திற்கு அஞ்சி நான் எங்கும் ஓடி ஒளியவும் இல்லை. ஏற்கனவே சிறைவாசத்தைப் பார்த்தவன் நான், அதனால் இந்த அரசியல் பழிவாங்கல் வழக்குகளுக்கு எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக முடியாது! விலக்கு கேட்கும் செந்தில் பாலாஜி! புதிய கோரிக்கை!

மேலும் அவர் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே வழக்கறிஞர்களைச் கலந்தாலோசிக்க கால அவகாசம் கோரப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்" என்றார்.

வழக்கின் முதல் தகவல் அறிக்கை குறித்து பேசிய அவர், "காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்.-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்" என்று கூறினார்.

அரசின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார். "மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட, அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதிலேயே அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது" என்றும் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு விளக்கமளித்து வருகிறார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2 நாட்களாக காவல் நிலையத்தில் ஆஜராகாத செந்தில் பாலாஜி?! போலீசாரின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share