×
 

மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை! டி.ஆர்.பாலு., கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

சென்னை: தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டி.ஆர். பாலு, கே.என். நேரு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

த.வெ.க.வுக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்கும் முயற்சி சிக்கலில் உள்ளது. இந்நிலையில், தி.மு.க. - அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படுகிறது. இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் அ.தி.மு.க. தரப்பில் இருந்து வரும் அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க.வின் 46 எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்துள்ள பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அவர்களை நேரில் சந்தித்து “விரைவில் நல்ல செய்தி வரும்” என நம்பிக்கை அளித்துள்ளார்.

இதையும் படிங்க: இக்கட்டான சூழலிலும் உங்களுடன் நான் இருப்பேன்!! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த்!

மேலும், இன்று பேட்டி அளித்த அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, “எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார்” என உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை, இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் திசையில் செல்வதை உறுதிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மூத்த தலைவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க.வின் ஆட்சி அமைப்பு முயற்சி தடுமாறும் சூழலில், தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணி உருவாகும் என்பது அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு அமையும் விவகாரம் விரைவில் தெளிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு பெரும் கட்சிகளும் இணைந்தால், அது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். த.வெ.க.வின் வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த அரசியல் சூழல், அடுத்த சில நாட்களில் முக்கிய திருப்பத்தை சந்திக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: தவெகவுக்கு அதிமுக ஆதரவா? மாறும் அரசியல் களம்! எடப்பாடி பழனிசாமியுடன் என்.ஆனந்த் சந்திப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share