அதிமுகவின் பார்முலாவை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்! எடுபடுமா சென்டிமென்ட் பிரசாரம்!
அ.தி.மு.க.,வின், 'சென்டிமென்ட் பார்முலா'வை கையில் எடுத்து, முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய துவங்கியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் பழைய ‘சென்டிமென்ட் பார்முலா’வை இப்போது திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்து தீவிர பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
கடந்த 2021 தேர்தலின்போது, திமுக எம்.பி. ஆ.ராஜா அளித்த ஒரு கருத்தை மையமாக வைத்து அதிமுக கொங்கு மண்டலத்தில் சென்டிமென்ட் அரசியல் செய்து வெற்றி பெற்றது. இப்போது அதே உத்தியை ஸ்டாலின் பக்கம் திருப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், “கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சி இல்லையென்றால் ஸ்டாலின் கொரோனாவில் போயிருப்பார்” எனப் பேசினார். பின்னர் விளக்கம் அளித்தாலும், அந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் நிற்கிறது!! நெல்லை பிரசாரத்தில் திமுகவுக்கு ஷாக் கொடுத்த விஜய்!!
இதை பயன்படுத்தி முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தபோது கடுமையாக பதிலடி கொடுத்தார். “நான் மரணத்துக்கு பயப்படுபவன் அல்ல. அவசர நிலைக்காலத்தில் 23 வயதில் சிறையில் கொடூர சித்திரவதைகளை அனுபவித்தவன். கொரோனா வார்டுக்கே பிபிஇ கிட் அணிந்து சென்றவன். என் மனைவி துர்கா ஒரு வாரம் என்னுடன் பேசவில்லை. ஆனால் மக்களைக் காக்க எந்த அளவுக்கும் செல்வேன்” என்றார்.
மேலும், “மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், புதுமைப் பெண்கள், தமிழ் புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்திய என்னை இல்லாமல் போக வேண்டும் என பழனிசாமி நினைக்கிறார். மரணம் எல்லோருக்கும் உண்டு, ஆனால் என் நலத்திட்டங்களை யாராலும் புதைக்க முடியாது” என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களும் மேடைப் பேச்சுகள், வாகனப் பிரசாரங்களில் இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசுகிறார்” என திமுக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சர்ச்சை தமிழ்நாடு அரசியலில் மீண்டும் சென்டிமென்ட் அரசியல் தலைதூக்கியுள்ளதை காட்டுகிறது. 2021ல் அதிமுகவுக்கு வெற்றியைத் தந்த அதே உத்தியை இப்போது திமுக பயன்படுத்தி வாக்குகளை ஈர்க்க முயல்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழக தேர்தல் ஏற்பாடுகள் எப்படி? பாதுகாப்பு போதுமா? தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!