×
 

“விஜய்க்கு தான் நஷ்டம்!” பா.ஜ.க கூட்டணியில் இணைய தவெகவிற்கு தமிழிசை அழைப்பு!

பா.ஜ.க.வுடன் விஜய் கைகோர்ப்பது அவருக்கே நல்லது; இல்லையெனில் அவருக்கே பின்னடைவு ஏற்படும் எனத் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலில் பா.ஜ.க அனுபவம் மிக்கக் கட்சி என்றும், தி.மு.க-விற்கும் தங்களுக்கும் வாக்கு சதவீதத்தில் மிகச் சிறிய வித்தியாசமே உள்ளது என்றும் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார். நடிகர் விஜய்க்கு ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுவது வெறும் ‘அனுமானம்’  மட்டுமே என்று தெரிவித்த தமிழிசை, 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் அனுபவம் மிக்கப் பா.ஜ.க-வுடன் அவர் கைகோர்ப்பது அவருக்கே நல்லது எனப் பேசினார். ஒருவேளை விஜய் வரவில்லை என்றால் பா.ஜ.க-விற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், அது விஜய்க்குத்தான் பின்னடைவாக அமையும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்ததுடன், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விரிவாகப் பேசினார். “மத்திய அரசின் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பலன்களை அனுபவித்துவிட்டு, பிரதமர் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் கூறி வருகிறார்; இதனால்தான் 2026-ல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மதவெறி அமைப்புகளை விமர்சிக்க தயங்குவது ஏன்? விஜய்க்கு வேல்முருகன் கேள்வி!  

தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “புதிய கட்சிகள் வருவது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். ஆனால், தி.மு.க 35 சதவீத வாக்குகளையும், பா.ஜ.க கூட்டணி 18 சதவீத வாக்குகளையும் வைத்துள்ளன. தி.மு.க-விற்கும் எங்களுக்கும் வெறும் 1, 2 சதவீதங்கள் தான் வித்தியாசம் உள்ளது” என்றார். விஜய்க்கு ஆதரவு பலமாக இருப்பதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய அவர், “நீங்கள் அனுமானத்தில் விஜய்யைப் பலமானவர் என்கிறீர்கள்; ஆனால் நாங்கள் 21 மாநிலங்களில் ஆட்சி செய்த அனுபவத்தின் அடிப்படையில் பலமாக இருக்கிறோம்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

கூட்டணி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழிசை, “அனுபவத்தில் பலமாக இருப்பவர்களோடு (பா.ஜ.க), அனுமானத்தில் இருப்பவர்கள் (விஜய்) இணைந்து வந்தால் அது அவர்களுக்கு நல்லது; வரவில்லை என்றால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர் வராவிட்டால் அது அவருக்குத்தான் கெடுதலாக முடியும்” எனத் தனது பாணியில் எச்சரிக்கை கலந்த அழைப்பை விடுத்தார். இதன் மூலம் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் பா.ஜ.க-வுடன் இணைய வேண்டும் என்பதில் அக்கட்சி ஆர்வமாக இருப்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "விஜய் யாரு கட்டுப்பாட்டுல இருக்காரு? திரிஷாகிட்ட கேளுங்க!" - புட்டு புட்டு வைத்த பி.டி.செல்வகுமார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share