மதவெறி அமைப்புகளை விமர்சிக்க தயங்குவது ஏன்? விஜய்க்கு வேல்முருகன் கேள்வி!
தவெக தலைவர் விஜய், மதவாத சக்திகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தத் தயங்குவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மற்றும் அடுத்தடுத்த மேடைப் பேச்சுகளில் நடிகர் விஜய் முன்வைத்த கருத்துகளுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருவது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகிலுள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில், மண்ணின் மக்களுக்கே நிரந்தர வேலை வழங்கக்கோரியும், சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், "விஜய் அவர்களே, சினிமாவில் 40 வயது பெண்ணைக் காதலிக்கும் 18 வயது சிறுவனாக நடிப்பதெல்லாம் சினிமாவுடன் முடிந்துவிட வேண்டும். ஆனால், நிஜ அரசியலில் உங்களின் நக்கல் பேச்சுக்கள் உங்களுக்கு அழகல்ல. நீங்கள் ஒரு கட்சித் தலைவராக உருவெடுத்த பிறகு, நாட்டின் முக்கியப் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன்? குறிப்பாக, கிறிஸ்தவ மக்கள் மீதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தும் மதவெறி அமைப்புகளை நீங்கள் ஏன் பெயர் குறிப்பிட்டு விமர்சிக்க மறுக்கிறீர்கள்? அப்பாவி முஸ்லிம் மக்களைக் கேலி செய்யும் சக்திகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுக்காதது ஏன்?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "விஜய் யாரு கட்டுப்பாட்டுல இருக்காரு? திரிஷாகிட்ட கேளுங்க!" - புட்டு புட்டு வைத்த பி.டி.செல்வகுமார்!
தொடர்ந்து பேசிய வேல்முருகன், "பாஜக-வின் பி டீம் (B Team) என உங்களைச் சிலர் விமர்சிப்பதற்கு இடம் கொடுக்கும் வகையிலேயே உங்களின் செயல்பாடுகள் உள்ளன. மதச்சார்பின்மை எனப் பொதுவாகப் பேசிவிட்டு, மதவாத அமைப்புகளைக் கண்டிக்கத் தயங்குவது ஒரு முதிர்ச்சியான அரசியலுக்கு அடையாளம் அல்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, ஒரு தலைவராக நீங்கள் மௌனம் காப்பது வேதனையளிக்கிறது. 'அங்கிள்' என நக்கலாகப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, களத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்" எனத் தன் உரையில் விஜய்க்குச் சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!