×
 

சூடு பிடிக்கிறது டாஸ்மாக் முறைகேடு வழக்கு! ஐஏஎஸ் அதிகாரி விசாகனை நெருங்கும் போலீஸ்! விசாரணை தீவிரம்!

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியை தேடும் நடவடிக்கை தீவிரம்.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நெருங்கிய நண்பர் ரத்தேஷ்ராஜ், டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகன் உள்ளிட்ட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கு தொடர்பாக கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான ரமேஷ் (43), கார்த்திக் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: பிரபா ஒயின்ஸ் is Back... தனியார் மயமாகும் டாஸ்மாக்... அமைச்சர் சொன்னது என்ன?

இதையடுத்து வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ரத்தேஷ்ராஜ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி விசாகன் ஆகியோரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தேடப்படும் நபர்களுக்கும், குற்றச்சாட்டில் கூறப்படும் முறைகேடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி விசாகன் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில், அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் விற்பனை நடைமுறைகளில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடு தொடர்பான இந்த வழக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: #BREAKING ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்... டாஸ்மாக் மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... அடுத்த முக்கிய புள்ளி தலைமறைவு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share