இது சரிபட்டு வராது!! தொகுதி மாத்துனாதான் உண்டு!! நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை தனி ரூட்!!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும் தொகுதி மாறி போட்டியிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது தொகுதிகளை மாற்றி போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகையும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் தொகுதி மாற்றத்தை பரிசீலித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை, அதிமுக கூட்டணியின் பழனியை 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தும் தொகுதியில் பெரிய அளவில் மக்கள் பணிகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் தொண்டர்களிடமே எழுந்துள்ளது.
மேலும், செல்வப்பெருந்தகை பெயரைச் சொல்லி தொகுதியில் உள்ள தொழிலதிபர்களிடம் நடப்பதாக கூறப்படும் வசூல் குறித்த புகார்கள் மக்களிடமும் கட்சியினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கும் வைகோவின் சமத்துவ நடைபயணம்?! காங்கிரஸ் புறக்கணிப்பு!! கூட்டணிக்குள் சலசலப்பு!!
தொழிலதிபர்கள் பலர் செல்வப்பெருந்தகை மீது கோபத்தில் இருப்பதாகவும், அவர் மீண்டும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க பெரும் தொகை செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. இந்த அழுத்தங்களை உணர்ந்த செல்வப்பெருந்தகை, இம்முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
திமுகவுடன் நல்ல உறவை பேணி வரும் செல்வப்பெருந்தகைக்கு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆதரவாக இருக்கிறார். சேகர்பாபு திமுக தலைமையிடம் பேசி எழும்பூர் தொகுதியை செல்வப்பெருந்தகைக்கு ஒதுக்கீடு செய்ய முயற்சி செய்திருப்பதாக தெரிகிறது.
எழும்பூர் தொகுதியின் தற்போதைய திமுக எம்எல்ஏ பரந்தாமனுக்கும் சேகர்பாபுவுக்கும் உடன்பாடு இல்லாத நிலையில், செல்வப்பெருந்தகையை அந்த தொகுதிக்கு கொண்டு வருவதன் மூலம் இரு நோக்கங்களை சேகர்பாபு நிறைவேற்ற முயல்வதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் செல்வப்பெருந்தகை பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட உள்கட்சி சர்வேயில் தொகுதி அவருக்கு சாதகமாக இல்லை என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, தொகுதியில் அதிகம் உள்ள பட்டியலின மக்கள், நாடார், யாதவ சமூகத்தினர் பாஜகவுக்கும் நாகேந்திரனுக்கும் எதிரான மனநிலையில் இருப்பதாக சர்வே காட்டியுள்ளது.
தனது முக்குலத்தோர் சமூக செல்வாக்கு இருந்தாலும், எதிர்தரப்பு முக்குலத்தோர் வேட்பாளரை நிறுத்தினால் தோல்வி உறுதி என்று சர்வே முடிவு கூறியுள்ளது. இதனால் கலக்கமடைந்த நயினார் நாகேந்திரன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு மாற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
அந்த தொகுதியில் தனது சமூகத்தினர் அதிகம் இருப்பதுடன், அதிமுக-பாஜக கூட்டணிக்கு சாதகமான தொகுதியாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாத்தூரிலும் வெற்றி உறுதியில்லை என்று உறவினர்கள் சிலர் எச்சரித்ததால், கடைசி நேரத்தில் முடிவை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அவரு பேச்சுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! கூட்டணிக்கு வேட்டு வைத்த பிரவீன் சக்ரவர்த்தி! செல்வப்பெருந்தகை காட்டம்!