100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியலில், புதிய அரசாக த.வெ.க. ஆட்சி அமைத்திருப்பது அரசியல் ரீதியாக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியலில், புதிய அரசாக த.வெ.க. ஆட்சி அமைத்திருப்பது அரசியல் ரீதியாக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த 100 நாட்களில் அரசு அளித்த வாக்குறுதிகள், எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் தற்போது விவாதமாகியுள்ளன.
முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற நாளிலேயே மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு கூடுதல் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு படை ஆகியவை அதில் இடம்பெற்றன.
தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது. குறு விவசாயிகளின் ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி, அம்மா உணவகங்களை மேம்படுத்தும் நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியாகின.
இதையும் படிங்க: என் பேச்சை திரித்து சித்தரிக்கிறார்கள்! முதல்வர் விஜய்யை இழிவுபடுத்தவில்லை!” சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண்’ திட்டம் தொடங்கப்பட்டதுடன், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பட்ஜெட்டில் திருமணப் பெண்களுக்கு தங்க நாணயம், குடிசைகளுக்கு பதிலாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள், பிளஸ்-1 மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள், அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழில் முதலீட்டிலும் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 100 நாட்களில் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.02 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மறுபுறம் சட்டம்-ஒழுங்கு, பாலியல் குற்றங்கள், மின்தடை, குப்பை அகற்றுதல் போன்ற விவகாரங்களில் அரசுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எனவே, த.வெ.க. அரசின் முதல் 100 நாட்களை முழுமையான வெற்றி என்றும், தோல்வி என்றும் ஒரே வார்த்தையில் மதிப்பிட முடியாது. அறிவிப்புகள் வேகமாக வெளியாகியுள்ள நிலையில், அவை அனைத்தும் நடைமுறையில் எவ்வளவு பயன் தருகின்றன என்பதே அரசின் உண்மையான செயல்திறனை தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!