×
 

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்!! செந்தில் பாலாஜி திட்டம் அம்பலம்?! பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில், மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான த.வெ.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை தங்களது கட்சியில் சேர்க்க முயற்சி நடப்பதாக அரசியல் குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டு வந்தன.

இந்த சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, தனது ஆதரவை மாற்றுமாறு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதுடன், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகைக்குள்ள இருக்குற வேலையை மட்டும் பார்த்தா போதும்... அர்லேகரை எச்சரித்த நிர்மல் குமார்...!

விசாரணையில், தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் ஒன்றின் நிறுவனர் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ் உள்ளிட்டோர் முதலில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கரூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் பெங்களூருவில் பதுங்கியிருந்த செல்வன், சீனிவாசன் மற்றும் ராஜேஷ் ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

விசாரணையின்போது, த.வெ.க. அரசை கவிழ்க்கும் நோக்கில் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும், சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஒரு வாரத்திற்கு மேல் ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த திட்டத்தில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்டவர்கள் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலங்கள் குறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக முழுமையான விவரங்களை வெளியிடவில்லை. மேலும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவை விசாரணை நிலையில் உள்ள தகவல்களாகவே கருதப்படுகின்றன. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்ற நபர்களை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: வீடு புகுந்து தாக்கிய வழக்கு! தவெக அமைச்சருக்கு சிக்கல்! மரிய வில்சன் நேரில் ஆஜராஜ புதுவை கோர்ட் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share