விஜய்க்கு போட்டியாக மாஸ் காட்ட தயாராகும் உதயநிதி! கருணாநிதி, ஸ்டாலின் பாணியில் தயாராகும் பிறந்தநாள் விழா!
துணை முதலமைச்சர் உதயநிதியின் 48வது பிறந்த நாள் வரும் 27ம் தேதி வருகிறது.சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அதை பிரமாண்டமாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்த நாள் வரும் நவம்பர் 27-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதுவரை உதயநிதி தனது பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் அல்லது சிறிய அளவில் கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக சென்னை அறிவாலயத்தில் (தி.மு.க. தலைமைக் கழகம்) பிரமாண்டமாக கொண்டாட தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியும், தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலினும் தங்கள் பிறந்த நாளை அறிவாலயத்தில் தொண்டர்களுடன் கொண்டாடுவது வழக்கம். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவிப்பர்; பலவகை பரிசுப் பொருட்களும் வழங்குவர்.
அதே போல இந்த ஆண்டு உதயநிதியின் பிறந்த நாளையும் அறிவாலயத்தில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 50,000 தொண்டர்கள் வரிசையில் நின்று நேரில் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடுத்த மாசம் கூட்டணி அறிவிப்பு!! ஆக்ஷனில் இறங்கிய ராமதாஸ்! பாமக தொண்டர்கள் உற்சாகம்!
இது மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் நடுதல், இரத்ததானம், மாணவர்களுக்கு நோட்டு-புத்தக வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், “உதயநிதி நடிகராக இருந்தபோது கோடம்பாக்கத்தில் உள்ள தனது பட நிறுவன அலுவலகத்தில் பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் முரசொலி அறக்கட்டளை நிர்வாகியானதும், இளைஞரணி செயலாளரானதும் அன்பகத்தில் கொண்டாடினார்.
துணை முதலமைச்சரான பின்னர் பசுமை வழிச்சாலை அரசு இல்லத்தில் கொண்டாடி வந்தார். இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைக்கவும், உதயநிதியை இளம் தலைவராக முன்னிறுத்தவும் அறிவாலயத்தில் பிரமாண்ட கொண்டாட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்” என்றனர்.
குறிப்பாக, தேர்தல் களத்தில் உதயநிதிக்கு நேரடி போட்டியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் தி.மு.க.வின் “ஷோ ஆஃப் ஸ்ட்ரெங்த்” என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அறிவாலயத்தில் நடக்கும் இந்த பிரமாண்ட விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முரண்டு பிடிக்கும் ராமதாஸ் - அன்புமணி!! முட்டி மோதி முட்டுக்கொடுக்கும் அதிமுக - பாஜக!