×
 

தனி சின்னத்தில் போட்டியிட்டா 3 தொகுதிதான்!! கறார் காட்டும் திமுக!! வைகோ அப்செட்!

ராஜ்யசபா எம்.பி. பதவியை எதிர்பார்த்த வைகோ, தி.மு.க. கூட்டணியில் தான் நெருக்கமாக இருப்பதை உணர்த்த, தன் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் ஸ்டாலினை அழைத்தார்.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், தி.மு.க. – ம.தி.மு.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை தி.மு.க. கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சமீபத்தில் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினரை ம.தி.மு.க. தரப்பு சந்தித்தபோது, வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் மற்றும் சட்டசபை தேர்தலில் 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பு இதை மறுத்துவிட்டது. ராஜ்யசபா சீட் கிடையாது என்றும், தனி சின்னத்தில் போட்டியிட்டால் 3 தொகுதிகள் மட்டுமே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவால் வைகோ கடும் அதிருப்தி அடைந்துள்ளார். ராஜ்யசபா பதவியை எதிர்பார்த்திருந்த வைகோ, தி.மு.க. உடனான நெருக்கத்தை உணர்த்தும் வகையில் தனது நடைபயணத்தை தொடங்க முதல்வர் ஸ்டாலினை அழைத்தார். மேலும் தான் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சுக்களை புத்தகமாக தயார் செய்து, ஸ்டாலினிடம் அணிந்துரை கேட்டார். ஆனால் ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நல்லகண்ணு அஞ்சலி!! எடப்பாடி தவிர்த்தது ஏன்? அப்படி என்ன பிடிவாதம்? அதிமுகவினர் சொல்லும் காரணம்?

இந்நிலையில் ம.தி.மு.க. முதன்மை செயலர் துரை ஆதரவாளர் சத்தியகுமாரன் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஈரத்துண்டை போட்டு கழுத்தறுத்து, இன்றும் நம்பிக்கை துரோகம் செய்யும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி தி.மு.க.விலிருந்து உடனே வெளியேறுங்கள்” என்று குற்றச்சாட்டியுள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மூலம் நெருக்கடி கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்ததாகவும், 2024-ல் துரையால் தனி சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்ததால் கட்சி பாதுகாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

“அடுத்த வீட்டுப் பிள்ளைக்கு பாலும் பாயசமும் கொடுத்து, நம் குழந்தைகளுக்கு பச்சை தண்ணீர் மட்டும் கொடுக்கின்றனர். இதை ம.தி.மு.க. தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆல மரத்தை ஒருபோதும் சாய்த்துவிட முடியாது. வைகோ உடனே முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த தேர்தல்களில் ம.தி.மு.க.விலிருந்து அவைத்தலைவர் துரைசாமி, முன்னாள் அமைச்சர் சந்திரசேகர், சிவகங்கை மாவட்டச் செயலர் செவந்தியப்பன் உள்ளிட்ட 12 பேர் வெளியேறியுள்ளனர். துணை பொதுச்செயலர் மல்லை சத்யா தனிக்கட்சி தொடங்கியுள்ளார். இதனால் ஓட்டு வங்கி பிரிந்ததால் தி.மு.க. சீட் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வைகோ அடுத்து என்ன முடிவெடுப்பார் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் 3 கட்சிகளுடன் டீல்!! பரபரக்கும் அறிவாலயம்! அதிகரிக்கும் கூட்டணி கட்சிகள் டிமாண்ட்! பதறும் திமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share