×
 

மும்பை வர்றேன்!! முடிஞ்சா காலை வெட்டுங்க!! தாக்கரே சகோதரர்களுக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!!

“மும்பை வந்தால், என் காலை வெட்டுவேன் என எழுதி இருக்கின்றனர். நான் மும்பை வருவேன், என் காலை வெட்டிப் பாருங்கள்,” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி மும்பை மாநகராட்சி (BMC) தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை அளித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் பிரசாரம் செய்தபோது, “மும்பை ஆண்டுக்கு 78,000 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட சர்வதேச நகரம். இது மகாராஷ்டிராவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல” என்று அவர் கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராஜ் தாக்கரே அண்ணாமலையை “ரசமலாய்” என்று கிண்டலடித்து பேசியதோடு, மும்பைக்கு வந்தால் கால் வெட்டுவோம், இங்க் அடிப்போம் என்று மிரட்டியுள்ளனர். சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’விலும் இதுபோன்ற மிரட்டல்கள் எழுதப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இன்றும் நேர்காணலை தொடரும் இபிஎஸ்... சென்னைக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம்...!

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “ஆதித்ய தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாம் யார்? அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள்.

சாதாரண விவசாயி மகனான நான் இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டேனா எனத் தெரியவில்லை. ‘மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவேன்’ என்று எழுதியுள்ளனர். நான் மும்பைக்கு வருவேன். என் காலை வெட்டிப் பாருங்கள். இந்த மிரட்டல்களுக்கு பயந்தால், என் ஊரிலேயே இருந்திருப்பேன்” என்று தைரியமாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “காமராஜரை இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று சொன்னால், அவர் தமிழர் இல்லை என்று ஆகிவிடுமா? அதேபோல், மும்பை உலகின் தலைநகரம் என்று சொல்வதால், மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா? மூன்று தாக்கரேக்கள் கூட்டம் போட்டு என்னை அவமானப்படுத்துகின்றனர்.

தமிழர்களையும் ‘வேட்டி கட்டியவர்கள், லுங்கி கட்டியவர்கள்’ என்று இழிவாகப் பேசுகின்றனர். இவர்களின் கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது. இவர்கள் மிரட்டலால் பிழைப்பு நடத்துபவர்கள்” என்று விமர்சித்தார்.

அண்ணாமலை மேலும், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள ஊழல் புகார்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும், தே.ஜ. கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சீமானை சாதாரணமாக எடைபோட வேண்டாம் என்றும், கொள்கைக்காக துணிச்சலாக நிற்கும் ஒரு மனிதன் என்றும் பாராட்டினார்.

மும்பை தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட இந்த வார்த்தைப் போர், தமிழக-மகாராஷ்டிரா அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்ணாமலையின் தைரியமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஈரான் வன்முறையில் 646 பேர் பலி! டெஹ்ரானில் அதிகரிக்கும் பதற்றம்! அமெரிக்கர்களுக்கு பறந்த உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share