மெக்சிகோவின் டோலுகா விமான நிலையத்திற்கு அருகே ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. நேற்று பிற்பகல் அகாபுல்கோவிலிருந்து டோலுகாவிற்கு பறந்து கொண்டிருந்த ஒரு தனியார் ஜெட் விமானம் மெக்சிகன் மாநிலத் தலைநகரில் உள்ள டோலுகா சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் இருந்து சில மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர்.
சர்வீசியோஸ் ஏரியோஸ் எஸ்ட்ரெல்லாவால் இயக்கப்படும் XA-PRO பதிவைக் கொண்ட செஸ்னா 650 சைட்டேஷன் III என்ற சிறிய ரக ஜெட் விமானம், விமான நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள சான் பெட்ரோ டோட்டோல்டெபெக் மாவட்டத்தில் உள்ள காம்போ மற்றும் சான் பெட்ரோ தெருக்களுக்கு இடையே உள்ள டிரக் பராமரிப்பு கேரேஜ் மீது மோதி நொறுங்கியது.
அதனையடுத்து வெடித்துச் சிதறிய விமானம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் பல கிலோமீட்டர்கள் அளவிற்கு வெடி சத்தம் கேட்டதோடு, கரும்புகை மூட்டமும் சூழ்ந்ததால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: கல்வீச்சு...கலவரம்... கண்ணீர் புகைகுண்டு... மெக்சிகோவில் விஸ்வரூபம் எடுக்கும் ஜென் z போராட்டம்...120 பேருக்கு ஏற்பட்ட பரிதாபம்?
விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானி அதனை அருகேயுள்ள கால்பந்து மைதானத்தில் தரையிறக்க முயன்றுள்ளார். அப்போது விமானமானது மிகவும் தாழ்வாக பறந்து சென்றுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஜெட் விமானம், டிரக் பராமரிப்பு பட்டறை மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. மெட்டெபெக்கைச் சேர்ந்த விமானி மற்றும் துணை விமானி மற்றும் எட்டு பயணிகள் உயிரிழந்தனர்.
மெக்சிகோ மாநிலம் மற்றும் டோலுகா நகராட்சியின் அவசர சேவைகள் உடனடியாக விரைந்து செயல்பட்டன. மேலும் தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைந்தனர். விமானம் விழுந்து நொறுங்கிய போது டிரக் பராமரிப்பு பட்டறை விடுமுறையில் இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மெக்சிகோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (FGR) விசாரணையைத் தொடங்கியுள்ளது, வழக்கறிஞர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கூட்டாட்சி போலீஸ் முகவர்கள் அரசு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகன் மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மற்றும் சிவில் ஏரோநாட்டிக்ஸ் பொது இயக்குநரகத்தின் நிபுணர்கள் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்...!! 7 பேருந்துகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி தீ விபத்து... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை...!