டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு யார் அனுமதி அளித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி, ஜூலை 20-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற மாணவர்களின் அமைதியான போராட்டத்தில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். கல்வி முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியே மாணவர்கள் போராட்டம் நடத்தியதாகவும், அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின்போது கண்ணீர் புகைக் குண்டுகள், தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையில் பல மாணவர்கள் காயமடைந்ததாகவும், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தியின் பிரதமர் கனவுக்காக களமிறங்கும் காங்கிரஸ்... மாவட்ட தலைவர்களுக்கு 10 நாள் பயிற்சி!
மேலும், பெல்லட் துப்பாக்கியால் காயமடைந்த 19 வயது மாணவர் ஒருவரை சந்தித்ததாகவும், அந்த மாணவர் தனது ஒரு கண்ணை இழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் ராகுல் காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் பணியாற்றும் பாதுகாப்புப் படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதா என்று அமித் ஷாவிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி அனுமதி வழங்கப்படவில்லை என்றால், அந்த உத்தரவை பிறப்பித்தது யார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சீருடை இல்லாமல் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் காவல்துறையினரா அல்லது வேறு நபர்களா என்றும், அவர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கியது யார் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைதியான போராட்டங்களை பாதுகாப்பதும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும் அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரலை வன்முறையால் அடக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது விளக்கம் என்ன வெளியாகும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!