மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து 2024 மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிய அளவிலான வாக்குத் திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடக தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ராகுல் காந்தி, கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், ஒரே முகவரியில் ஏராளமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், செல்லாத புகைப்படங்கள் மற்றும் படிவம் 6-இன் தவறான பயன்பாடு போன்ற ஐந்து வழிகளில் மோசடி நடந்ததாகவும் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவில் ஐந்து மாதங்களில் முந்தைய ஐந்து ஆண்டுகளை விட அதிக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், இது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல் பீகாரில் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் தொடங்கிய SIR (Special Intensive Revision) செயல்முறையை, "வோட் சோரி" (வாக்கு திருட்டு) என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த முறைகேடுகள் தேர்தல் நியாயத்தைப் பாதிக்கிறது என்று கூறி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பிக்களுடன் கடந்த 11ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு பேரணி சென்றார். ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி டெல்லி காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது.
இதையும் படிங்க: கடமையை செய்யாத தேர்தல் கமிஷன்!! தேசிய அளவில் நடந்த ஓட்டு மோசடி.. கொந்தளிக்கும் ராகுல்காந்தி!!
தேர்தல் ஆணையம், ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் தவறான தகவல்களை பரப்புவதாகவும், ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல், இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம் என்றும், அரசியலமைப்பை பாதுகாக்க போராடுவோம் என்றும் வலியுறுத்தினார்.
https://x.com/i/status/1955604054341738876
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகவும், உயிருடன் இருக்கும் நபர்களை உயிரிழந்தவர்களாகக் காட்டி அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையத்தை கிண்டலடிக்கும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். "வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்களை பெற்றிருக்கிறேன், ஆனால் 'இறந்தவர்களுடன்' தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்திற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி!" என்று அவர் பதிவிட்டார்.
ராகுலின் இந்தப் பதிவு, பீகார் மக்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. அவர் தேநீர் அருந்தியவர்கள், உயிருடன் இருந்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் ராகுலின் இந்தப் பதிவு, இந்திய தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நாய் பிடிக்கும் உத்தரவுக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு!! கொடூரமானது! இரக்கமற்றது என வேதனை!!