சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் புதிய சலசலப்பு எழுந்துள்ளது. திமுக-வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக வளைத்து விடும் என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கூட்டணி விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேச விரும்பாததால், ராகுல் காந்தியை சந்திக்க கனிமொழியை அனுப்பி வைத்தார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பில், காங்கிரஸ் தரப்பில் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பல நிர்வாகிகள் விரும்புவதாக ராகுல் கூறினார்.
இதற்கு கனிமொழி நீண்ட விளக்கம் அளித்தார். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடைபெற்றதில்லை என்று சுட்டிக்காட்டினார். 1980 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கு உடன்பட்டு கருணாநிதி தொகுதி பங்கீடு செய்தார். 1980-ல் திமுகவும் காங்கிரஸும் சரிபாதி இடங்களை பகிர்ந்து கொண்டன.
இதையும் படிங்க: 100 தொகுதி + துணை முதலமைச்சர் பதவி! ராகுல்காந்தியை யோசிக்க வைத்த விஜய்!! கைகூடுமா கூட்டணி?!

ஆனால் இரு முறையும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. திமுக-வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஆட்சி அமைக்க பாஜக விடாது. அப்படி அமைத்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்எல்ஏக்களை வளைத்து ஆட்சியை கலைத்து விடும் என்று எச்சரித்தார். இது தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும், எனவே கூட்டணி ஆட்சி கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் மற்ற கூட்டணி கட்சிகளும் அதிகம் கேட்கும். இதை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு சுமூகமாக நடந்தாலும், ஆட்சி பங்கு கோரிக்கைக்கு திமுக தரப்பில் தெளிவான 'மறுப்பு' வெளியாகியுள்ளது. கூட்டணி தொடரும் என உறுதி அளிக்கப்பட்டாலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை.
எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்து வருகின்றன. திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி பாஜகவுக்கு வழி வகுக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. திமுக ஆதரவாளர்கள் தனி பெரும்பான்மை பெறுவதே மிகச் சிறந்தது என்று வாதிடுகின்றனர். 2026 தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி உறுதியாக இருந்தாலும், ஆட்சி பங்கு விவகாரம் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: காங்கிரஸை உடைக்க விஜய் திட்டம்!! கதறும் கதர் வேட்டிகள்! தவெகவுக்கு தாவ தயாராகும் முக்கிய புள்ளிகள்!