ராசிபுரம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வயது பேரனுடன் பாட்டியும் பலியானதோடு, 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் நாகியம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி நடேசன் (வயது 60). இவர் ஆடி மாத அமாவாசையையான நேற்று(12.8.26) ராசிபுரம் அடுத்த வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு, மனைவி அமுதா(52), மகன் பிரவீன் (32) உள்பட குடும்பத்தினர் 6 பேருடன் காரில் சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு சொந்த ஊருக்கு திரும்பியபோது, காரை நடேசனின் மகன் பிரவீன் ஓட்டி உள்ளார். இரவு 10 மணியளவில் ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிப்பட்டி அருகே சென்றபோது, எதிரே மரப்பாரம் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேராக மோதி விபத்திற்கு உள்ளானது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!
இதில் நடேசன், அவரது மனைவி அமுதா, மகன் பிரவீன், மருமகள் கோமதி(31), பேரன்கள் ஜீவித்(3), நிக்சித்(2) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததோடு, விபத்திற்கு உள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் நடேசனின் மனைவி அமுதா (52), பேரன் நிக்சித்(2) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த நடேசன், அவரது மகன் பிரவீன் உள்பட 4 பேருக்கு ராசிபுரம் மற்றும் சேலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பயங்கரம்... சமயபுரம் கோயிலுக்குச் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி... 7 பேரின் நிலை என்ன?