அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கோர வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 50 சுற்றுலாப் பயணிகள் மாயமாகிச் சிக்கித்தவித்து வரும் சூழலில், அவர்களை உடனடியாகக் கண்டறிந்து பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த சில தினங்களாகக் கொட்டித் தீர்த்து வரும் அதிதீவிர கனமழையால் முக்கிய ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலங்கள், சாலைகள் மற்றும் தொலைத்தொடர்புக் கட்டமைப்புகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டு அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த இயற்கை பேரிடரில் கைலாஷ் - மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள கடினமான நிலப்பரப்பில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுச் சிக்கியுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் செய்வதறியாது மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இந்த இக்கட்டான சூழல் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன; மனித உயிர்கள் பலியாகியிருக்கும் இந்தச் சோகமான சூழலில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியுள்ளனர். எனவே, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மிக விரைவாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட நமது மக்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு..! கண்துடைப்பாக இருக்கக் கூடாது..! அன்பில் மகேஷ் வலியுறுத்தல்.!!
இதன் தொடர்ச்சியாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அனுப்பப்பட்டுள்ள அவசரக் கடிதத்தில், "நேபாளத்தில் தகவல் தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு வெள்ளத்தில் தவிக்கும் 50 தமிழகச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அனைத்து இந்தியக் குடிமக்களையும் கண்டறிந்து மீட்க உயர்மட்ட அளவிலான தலையீடு அவசியமாகிறது. எனவே, காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களை உடனடியாக முடுக்கிவிட்டு, சிக்கியுள்ள மக்களைப் பத்திரமாக மீட்டு இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வரத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை.. திமுகவில் 110 புதிய மாவட்டங்கள்! விரைவில் வெளியாகும் பட்டியல்!!