இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாடமி விருது, 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 24 அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. தமிழில் முதல் விருது 1955இல் நெல்லை சார்ந்த ஆர்.பி. சேதுப்பிள்ளைக்கு அவரது ‘தமிழ் இன்பம்’ நூலுக்காக வழங்கப்பட்டது. இது தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் பிரிவில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு அவரது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆய்வு நூலுக்காகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்த ச. தமிழ்ச்செல்வன், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் பரிணாமத்தை ஆழமாக ஆராய்ந்து எழுதிய இந்நூலைத் தயாரிக்க இரண்டு ஆண்டுகள் அயராது உழைத்தார்.

50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படித்து, ஆழமான ஆய்வுடன் இப்படைப்பை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தமிழ் சிறுகதை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது.ஆனால், டிசம்பர் 18, 2025 அன்று டெல்லியில் நடைபெற்ற சாகித்ய அகாடமியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விருதாளர்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர், அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வன்முறை தீர்வா? MP அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு… செல்வப் பெருந்தகை கண்டனம்..!!
மத்திய கலாசார அமைச்சகத்தின் உத்தரவால் இந்த அறிவிப்பு தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாகித்ய அகாடமி போன்ற சுதந்திரமான அமைப்பில் கூட அரசு தலையீடு செய்வதாக எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “கலாசார அமைச்சகத்துடன் ஆலோசனை செய்யாமல் விருதுகளை அறிவிக்கக்கூடாது” என்ற நிபந்தனை, படைப்பாளிகளின் சுதந்திரத்தையும் தகுதியையும் அவமதிப்பதாகக் கருதப்படுகிறது.
இதனால், அகாடமியின் தன்னாட்சி பாதிக்கப்படுவதாகவும், அரசியல் தலையீடு அதிகரிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவம் இந்திய இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ச. தமிழ்ச்செல்வனின் படைப்பு தமிழ் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் மதிப்புமிக்க ஆய்வு என்பதால், இந்த விருது அவருக்கு உரியதாகப் பலரும் கருதுகின்றனர். ஆனால், அறிவிப்பு தாமதமாவதால், இலக்கிய விருதுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக பல எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள நாகாலாபுரத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

சாகித்ய அகாடமி விருது என்பது இந்திய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுக்காக, இந்திய அரசால் வழங்கப்படும் ஞானபீட விருதிற்கு பின் வழங்கப்படும் இரண்டாவது உயரிய இலக்கிய விருதாகும். தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், குறிப்பாக தமிழ் சிறுகதைகளின் பாரம்பரியமும் குறித்து ஆழமான பார்வையை வழங்கும் இந்த நூலுக்குக் கிடைத்திருக்கும் இந்த உயரிய அங்கீகாரம், எழுத்தாளர் அவர்களின் இலக்கியப் பங்களிப்பிற்கான சிறந்த பாராட்டாகும். இவ்விருதை பெற்றிருப்பதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இவ்விருதை பெற்றுள்ள ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பல சிறந்த படைப்புகளை எழுதி தமிழ் இலக்கிய உலகை வளப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்புடன் வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!