நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு, தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள், பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் உள்ளிட்ட புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலைஞர் நினைவு தினத்தில் ஓர் அரிய முயற்சி... இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்க நிதி நல்கை திட்டம் தொடக்கம்..!

இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பணி நிரந்தரம், தனியார்மையம் ஆக்குதலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தெரிவித்தார். இந்த நிலையில் முதலமைச்சர், தூய்மை பணியாளர்களுக்காக எப்போதும் திமுக அரசு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது.. எப்பதான் தீர்வு வரும்? வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!