தமிழக சட்டசபை தேர்தலில் 5-வது அணியாக கூட்டணி அமைந்த ராமதாஸ் – சசிகலா இருவரும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கு இருவருமே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்காக நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. கடந்த தேர்தல்களில் திமுக – அதிமுக என இரு திராவிட கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி இருந்தது. ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி, அ.தி.மு.க. பாஜக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
மேலும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த இவர், புதிய கட்சி தொடங்கி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடக் கூட்டணி அமைத்தார்.
இதையும் படிங்க: பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று 5 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தார். இதில் மயிலாடுதுறை தொகுதியில் பாக்கம் சக்திவேல் என்பவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை தொகுதிக்கு சுதாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
மயிலாடுதுறை தொகுதிக்கு மருத்துவர் ராமதாசும் வேட்பாளரை அறிவித்துள்ளதால் கூட்டணி முறிவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக மற்றும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது என கடந்த 20-ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இரு தரப்பிலும் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சு வார்த்தையும், முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மயிலாடுதுறை தொகுதிக்கு இருவரும் வேட்பாளர் அறிவித்துள்ளது கூட்டணி முறிவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி..! அதிருப்தியில் MLA அருள்..!! கட்சியை விட்டு விலக இருப்பதாக தகவல்..!!