சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒன்பது பேருக்கும் ஏப்ரல் ஆறாம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த மொபைல் கடை வியாபாரிகளான தந்தை பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜெ. பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை நேரத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் இருவரையும் அழைத்துச் சென்றனர். பிறகு மறுநாள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கடுமையான தாக்குதலால் படுகாயங்களுடன் இருந்ததாகவும், இரத்தக் காயங்கள், உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் பதிவாகியது. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

உடற்கூறாய்வு அறிக்கையில், இருவரது உடல்களிலும் 70க்கும் மேற்பட்ட காயங்கள், உள் ரத்தக்கசிவு, எலும்பு முறிவுகள் போன்றவை இருந்ததாகத் தெரியவந்தது. இது தெளிவாக காவல் துறையினரின் கொடூர தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதிப்படுத்தியது. இச்சம்பவம் வெளியானதும் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. மதுரை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை எடுத்தது. உடற்கூறாய்வு வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டது. முதலில் போலீஸ் விசாரணை நடத்தியபோதிலும், பெரும் அழுத்தத்தால் முதலமைச்சர் உத்தரவின்பேரில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கு...! குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கெடு..!!
சிபிஐ விசாரணையில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை, சதி, ஆதார அழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 9 போலீசும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விபரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தர வேண்டும். இந்த நிலையில், தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒன்பது பேருக்கும் ஏப்ரல் ஆறாம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்… தூக்குல போடுங்க..! சிபிஐ வாதம்..!!