சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்று வரும் முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: “சில்லறை பையன் சீமான்; நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது!” திருச்செந்தூரில் நாஞ்சில் சம்பத் அதிரடி!
இன்று 10ஆவது நாளாக இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏராளமான ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அவர் பணியாளர்களுடன் உரையாடியபோது, காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. “நான் இந்த நாட்டின் குடிமகன் தான். இங்கே இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்று சீமான் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊரக உள்ளாட்சி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அதைக் கண்ட சீமான், “அவர்களுடன் என்னையும் கைது செய்யுங்கள்” என்று கூறியவாறு தானும் வாகனத்தில் ஏறினார். இதையடுத்து அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஏற்கனவே 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சீமானின் கைதும் சேர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு சீமான் விடுவிக்கப்பட்டார். கைது சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கக் கூட அனுமதி இல்லையா? அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தப் போராட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பணியாற்றும் பெண் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. அரசு விரைவில் இவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!