சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் 19 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்கின்றனர். தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வரை போராட்டம் ஓயாது என திட்டவட்டமாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கஞ்சா வழக்கு போடுவேன் என போலீசார் மிரட்டுவதாகவும் ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயல் என்று தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தங்களின் நியாயமான உரிமைக்காக போராடும் ஆசிரியர் பெருமக்களை அதிகாரத் திமிரில் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மை எனவும் கண்டித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததும், அதே கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ததையும் நம்பி ஆசிரியப் பெருமக்கள் தங்களது முழுமையான ஆதரவினை அளித்து திமுகவினை ஆட்சியில் அமர்த்தினர். வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று ஆசிரியர்கள் போராடினர். ஆனால், வழக்கம்போல் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற வாக்குறுதியளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த திமுக அரசு இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்..! டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஆஸ்கர் பெறும்... சீமான் வாழ்த்து..!
இடைநிலை ஆசிரியர் போராட்டத்தில், தான் பங்கேற்க செல்வதை அறிந்து அவசர அவசரமாக ஆசிரியர் பெருமக்கள் மீது அடக்குமுறையை ஏவி கைது செய்துள்ளது அதிகாரத்திமிரின் உச்சம் என்று சாடிய சீமான், என்னை கண்டு அரசு ஏன் பயப்பட வேண்டும் என்றும் தான் போராட்டத்திற்கு துணை நிற்பதை திமுக அரசு தடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: திராவிட குப்பையை அடுப்பில் போட்டு தீந்தமிழ் பொங்கல் வையுங்கள்... சீமான் விமர்சனம்...!