கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். கடலூரில் ஏற்கனவே உள்ள அரசு தொழிற்பேட்டை அருகே மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். கடலூரில் ஏற்கனவே அமைந்துள்ள வேதிப்பொருள் தொழிற்சாலைகளால் கடலூர் நகரமே வாழத் தகுதியற்ற நரகமாக மாறிவரும் கொடுஞ்சூழலில் மீண்டுமொரு தொழிற்பேட்டை அமைப்பதென்பது கடலூர் நகரையே முற்றுமுழுதாக அழிக்கவே வழிவகுக்கும்.
திமுக அரசு பொறுப்பேற்ற நான்காண்டு ஆட்சிக்காலத்தில் உயிர் வாழ உணவளிக்கும் வேளாண் நிலங்களை அழித்து, அதன்மீது தொழிற்சாலைகளை நிறுவும் எதேச்சதிகாரப்போக்கு அடுத்தடுத்து தொடர்வது கொடுங்கோன்மை என்று கூறினார். திமுக அரசு ஆட்சி அதிகார பலத்தைப் பயன்படுத்தி கோவை மாவட்டம் அன்னூரில் 3,500 ஏக்கர் விளை நிலங்களை அழித்து புதிதாகத் தொழிற்வளாகம், திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலங்களை அழித்து புதிய தொழிற்சாலைகள், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4550 ஏக்கர் நிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் 3034 ஏக்கரில் 5வது தொழிற்வளாகம், ஆவடி அருகில் குடியிருப்புகளை அழித்து புதிய தொழிற்வளாகம் என்று வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களையும், மக்கள் வாழும் குடியிருப்புகளையும் வலுக்கட்டாயமாகப் பறிக்கும் கொடுங்கோன்மைச்செயல்கள் தொடர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

இதன் நீட்சியாக தற்போது கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தொழிற்பேட்டை அருகே மேலும் 1119 ஏக்கர் பரப்பளவில் மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைக்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் பிரிவு - 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக செய்வது பச்சை துரோகம்... Group4 மூலம் காலி பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்...!
கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்து இரண்டாவது தொழிற்பேட்டையை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையென்றால் கடலூர் மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அவசர அவசரமாக SIR... 6 கோடி பேருக்கு வாக்குரிமை பறிபோகும்... சீமான் எச்சரிக்கை...!