தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கொடூரமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (செப். 27) இரவு கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தபோது விஜயின் வாகனத்தை நோக்கி தொண்டர்கள் படையெடுக்கவே நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பெண்கள், 13 ஆண்கள், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, 60 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பின் விஜய் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியது கடும் விமர்சனத்தை சந்தித்தது. அவர் மருத்துவமனைக்குச் சென்றால் மேலும் நெரிசல் ஏற்படலாம் எனக் கூறி தவிர்த்ததாக த.வெ.க விளக்கம் அளித்தது. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாலையில் கரூர் அரசு மருத்துவமனையை நேரில் சந்தித்து, உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மேலும், ராணுவ நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தார்.
இதையும் படிங்க: சம்பவம் நடந்ததும் விஜய் எதுக்கு ஓடி ஒளியணும் ? ஆ.ராசா சாடல்...!
சம்பவத்திற்கு மூன்று நாட்கள் கழித்து (செப். 30) விஜய் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். "என் இதயம் வலியால் நிறைந்துள்ளது. இது என் வாழ்நாளில் மிகப் பெரிய துயரம். உயிரிழந்தவர்கள் என் ரசனையின் அன்பால் வந்தவர்கள். அவர்களுக்கு நான் கடன்பட்டவன். கரூருக்கு திரும்பி மக்களைச் சந்திக்க விரும்பினேன், ஆனால் அது மேலும் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் எனப் போலீஸ் எச்சரிக்கை விடுத்தது, விரைவில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பேன்" என உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார். த.வெ.க சார்பில் உயிரிழந்தோருக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டையும் அறிவித்தார். மேலும் அவர், "கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? அரசு பழிவாங்க நினைத்தால் என்னைத் தொடுங்கள், என் கட்சியினரை வேண்டாம்" என ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை; இருந்திருந்தால் அவரது மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார். இதற்கு நான் தான் பொறுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் என் மீது எடுங்கள். என்னை நம்பி வந்தவர்களையும், உடன் வந்தவர்களையும் கைது செய்ய வேண்டாம் என்று தானே பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் சினிமா பட வசனம் போல் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை அல்ல.

சி.எம். சார் என்று கூப்பிடுவதே சிறுபிள்ளைத்தனம். அவர் அப்படி பேசுவதை பார்க்கும்போது, அந்த இறப்பைவிட வலி அதிகமாக இருக்கிறது. எத்தனையோ சினிமா நடிகர்கள் கட்சி துவங்கியுள்ளனர். ஆனால், இதுபோல் பசி பட்டினியோடு நின்றது, மயக்கம் அடைவது போன்ற நிகழ்வுகள் நடந்ததில்லை. இனி வரும் காலங்கள் தெருத்தெருவாக சென்று வாக்கு கேட்பது, ஊர் ஊராக சென்று கூட்டம்போடுவது எனும் நடைமுறையை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் தற்குறி! கொலை குற்றவாளி...! விஜயை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… சர்ச்சை!